நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு மட்டுமே தொலைபேசி அழைப்புகளை ஓட்டுக்கேட்கவும், மின்னணு முறையில் அனுப்பப்படும் எந்தவொரு தகவலையும் கண்காணிக்கவும் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் இன்று (மார்ச் 29) கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் முந்தைய பாஜக அரசு எதிர்க்கட்சி தலைவர்களின் போன்களை ஒட்டுக்கேட்டு அவர்களை சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு பாஜகவின் ஆதரவு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரேஷ்மி சுக்லா 2019-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றபோது மகாராஷ்டிரா அமைச்சர்கள், அதிகாரிகளின் போன் உரையாடல்களை சட்டவிரோதமாக பதிவு செய்து அதனை முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸுக்கு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.


அந்த போன் உரையாடலில் மகாராஷ்டிராவில் போலீஸ் அதிகாரிகளின் இடமாறுதலில் இடைத்தரகர்கள் மற்றும் அமைச்சர்களின் குறுக்கீடு இருந்ததாக கூறப்படுகிறது. இக்குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தேவேந்திர ஃபட்நாவீஸ் கோரிக்கை விடுத்தார். இது குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அவ்விசாரணையின் அடிப்படையில் ரேஷ்மி சுக்லா மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.



இந்நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் பிரதிபலித்துள்ளார். வாட்ஸ்அப் உரையாடல்கள் உட்பட எந்தவொரு டிஜிட்டல் தகவலையும் கண்காணிக்கவும், ஹேக் செய்யவும் தேசிய அல்லது சர்வதேச ஏஜென்சிகளுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதிலளித்தார். "தொழில்நுட்ப சட்டம், 2000, தகவல்களின் பிரிவு 69 இன் சட்ட விதிகளின்படி, நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு மட்டுமே, எந்தவொரு தகவல் தொடர்பு டிவைசின் மூலமாகவும் பெறப்பட்டு, சேமிக்கப்படும் தகவல்களை இடைமறிக்க, கண்காணிக்க அதிகாரம் உள்ளது." என்று எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்தார்.


தகவல் தொழில்நுட்ப விதிகள், 2009 மற்றும் நோக்கத்திற்காக வெளியிடப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறை ஆகியவற்றிலும் தொலைபேசி ஒட்டுக்கேட்பதற்கான பாதுகாப்புகள் மற்றும் மறுஆய்வு நெறிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மேலும் விளக்கிக் கூறினார்.



பெகாசஸ் ஒட்டுக் கேட்பு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பானதை தொடர்ந்து இதுபோன்ற கேள்விகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.


பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளதாக கூறப்பட்டது. இச்செய்தியை சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்ட நிலையில் கடந்த வருட இறுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.