ஆண்டுக்கு 2 முறை பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்றும் யுஜிசி தலைவர் ஜெகதிஷ் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்துப் பேசிய யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார், ’’பொதுத் தேர்வுகளைத் தேவையில்லாததாக மாற்றி அமைக்காது. பயிற்சி மையங்களின் கலாச்சாரத்தை ஊக்குவிக்காது. இளங்கலைப் படிப்புகளில் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க தலைசிறந்த தனியார் பல்கலைக்கழகங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. மாநிலக் கல்வி வாரியங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் தேர்வால் பாதிக்கப்படமாட்டார்கள். 


அனைத்து வாரியங்களில் படிக்கும் மாணவர்களும் பங்குபெறும் வகையில்தான் தேர்வு அமையும். 2023-ல் இருந்து ஆண்டுக்கு 2 முறை பொது நுழைவுத் தேர்வு Common University Entrance Test (CUET) நடத்தப்படும்.


12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் இருந்தே CUET தேர்வுக்குக் கேள்விகள் கேட்கப்படும். 11ஆம் வகுப்பில் இருந்து கேள்விகள் இருக்காது’’ என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.



மத்திய அரசு இளங்கலை கல்லூரிப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) என்ற திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய யுஜிசி தலைவர் மண்டலா ஜெகதீஷ் குமார், ''மத்திய பல்கலைக்கழகங்களுக்கான இளங்கலை நுழைவுத் தேர்வை ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு (one nation, one exam) என்று நடைமுறைப்படுத்த விரும்புகிறோம்.  இந்த நடைமுறை மாணவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்துக் கல்வி வாரியங்களையும் சார்ந்த, குறிப்பாக வடகிழக்கு மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும் விதமாக அமையும். 


இதன் மூலம் கட்-ஆஃப் முறை மாற்றப்பட்டு,  நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும். இந்தத் தேர்வு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மீதான நிதிச் சுமையை குறைக்கும். ஏனெனில் விண்ணப்பதாரர்கள் இந்த ஒரு தேர்வை மட்டுமே எழுதினால் போதுமானது. இந்தத் தேர்வால் ஏற்கெனவே இருக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. நுழைவுத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு பொது மற்றும் ஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.


அனைத்து பல்கலைக்கழகங்களும் முதுகலைப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு முறையை பின்பற்றும் என நம்புகிறோம்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண