கேரள கோவில் ஒன்றில் இஸ்லாமிய பரதநாட்டிய கலைஞர் ஒருவரின் நாட்டிய விழா ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்து விழாக்கள், பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் கடை போட கூடாது என்ற குரல்கள் ஆங்காங்கே கேட்க தொடங்கி உள்ளன. முக்கியமாக கர்நாடகாவில் இந்து கோவில் திருவிழாவின் போது இஸ்லாமியர்கள் கடை போட கூடாது என்ற குரல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. சமீபத்தில் கூட உடுப்பியில் உள்ள ஹொஸா மார்குடி கோவிலில் நடக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது. இங்கு எல்லா வருடமும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கடை போட்டு வந்தனர். இந்த வருடம் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு கடை போடும் ஏலத்தை இந்துக்களுக்கு மட்டுமே கொடுப்போம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்த காரணத்தால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹிஜாப் தடை கல்வி நிறுவனங்களில் போடப்பட்ட நிலையில்தான் இப்படி இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் கேரளாவில் இஸ்லாமிய நாட்டிய கலைஞர் ஒருவர் கோவிலில் நடனம் ஆடுவதில் இருந்து தடுக்கப்பட்டு உள்ளார்.



கேரளாவை சேர்ந்த நடன கலைஞர் மன்சியா விபி திருச்சூரில் இரிஞ்சாலக்குடா பகுதியில் இருக்கும் கூடல்மாணிக்யாம் கோவிலில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருந்தார். இந்த கோவில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தேவசம் போர்ட் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அந்த கோவில் விழாவில் பல்வேறு கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கோவிலில் மன்சியா விபி பரதநாட்டியம் ஆட இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் மன்சியா விபி இஸ்லாமியர் என்பதால் அவர் நடனம் ஆட கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.


இது தொடர்பாக மன்சியா விபி அளித்துள்ள பேட்டியில், "நான் பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன், பல வருடங்களாக இந்த கலைக்காக என்னை அர்ப்பணித்துள்ளேன். இப்போது திடீரென கோவில் நிர்வாகம் எனக்கு போன் செய்து, நான் கோவிலில் நடனம் ஆடக்கூடாது என்று கூறி உள்ளனர். எனக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழா நிகழ்வுகள் எல்லாம் இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நான் இந்து இல்லை என்பதால் எனக்கு ஆடும் வாய்ப்பை மறுத்துள்ளனர். 'நீ எவ்வளவு நன்றாக ஆடினாலும், வேறு மதம் என்பதால் உன்னை அனுமதிக்க முடியாது' என்று கோவில் நிர்வாகம் என்னிடம் கூறியது.



ஏற்கனவே என்னுடைய மதத்தில் நான் பரதநாட்டியம் ஆடுவதால் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன். நான் ஷியாம் கல்யாண் என்ற இந்து இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டேன். இதனால் ஏற்கனவே நான் மதம் மாறிவிட்டதாக என்னை இஸ்லாமியர்கள் விமர்சனம் செய்கிறார்கள். இப்போது இந்துக்கள் நான் நடனம் ஆடுவதில் இருந்து தடுக்கிறார்கள். எனக்கு இப்போது மதமே இல்லை. நான் எங்கே செல்வது என்று?" மன்சியா விபி கேள்வி எழுப்பி உள்ளார்.


இதற்கு முன்பே குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நடனம் ஆடுவதில் இருந்து மன்சியா விபி தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத சார்பற்ற நமது கேரளாவின் நிலை இதுதான் என்று மன்சியா விபி கடும் விமர்சனத்தை வைத்துள்ளார். இதற்கு கோவில் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், பொதுவாக எங்கள் கோவில் விழாவில் கலந்து கொள்ளும் கலைஞர்களிடம் அவர்களின் மதம் பற்றி கேட்போம். மன்சியா விபி தனக்கு மதம் இல்லை என்றார். அதனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளது. இதே போல தமிழகத்தில் சில மாதங்கள் முன்பு ஒரு பிரச்சனை நடந்தது. ஸ்ரீரங்கம் கோவிலில் கலைமாமணி ஜாகிர் உசேன் நடனம் ஆடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு அவருக்கு தகுந்த நீதியை பெற்றுத்தந்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். இந்த சமபவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு முழுக்க உள்ள 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக சென்ற ஜனவரி மாதத்தில் ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டார். தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை கற்றுத்தரக்கூடிய அரசு இசைப்பள்ளிகள் தமிழ்நாடு முழுக்க உள்ளன. இதற்கு கலையியல் அறிவுரைஞராக ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்ட விஷயம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதுபோல மன்சியாவிற்கும் கேரளா விரைவில் நீதி வழங்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.