ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரமுள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மக்களவை உறுப்பினர் பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் விளக்கமளித்தார். அந்த விளக்கத்தில், “ ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்பிற்குள் கொண்டு வர சட்டமியற்ற அதிகாரம் உள்ளது. பந்தயம், சூதாட்டம், அரசியலமைப்பு சட்டத்தின் 7வது அட்டவணையில் 34வது பிரிவில் இடம்பெற்றுள்ளது. 7வது அட்டவணை 34வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை மாநில அரசுகளே இயற்ற முடியும்.
சில மாநில அரசுகள் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ளன. திறமை, அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டுகளுக்கு வேறுபாடுகள் இருப்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன. குறிப்பிட்ட விளையாட்டுக்கு திறன் வகுக்கப்பட்டுள்ளது என்றால் அது திறன் விளையாட்டு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டுகளை சூதாட்டம் என்றே இந்திய சட்டங்கள் வரையறுத்துள்ளன.” என தெரிவித்தார்.