உத்தரப்பிரதேசத்தில் காசியாப்த் நகரில் நாய் கடித்ததால் 1 வயது குழந்தையின் முகத்தில் 60 தையல்கள் போடப்பட்டுள்ளன. விஜயநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெர்ஹாம்பூர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. நாய் ஒன்று ஒன்றரை வயது பெண் குழந்தையின் முகத்தில் கடித்தது.


60 தையல்:


இதில் குழந்தை படுகாயமடைந்தது. குழந்தை காசியாபாத் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நொய்டா ட்ராமா சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டது.


முதலில் மாவட்ட மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் தயங்கினர். அரசு மருத்துவமனையில் ஊசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். பின்னர் எம்ஜிஎம் மருத்துவமனையில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அத்த்துடன் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. குழந்தையின் முகத்தில் 60 முதல் 70 தையல்கள் போடப்பட்டன. இப்போது அந்த குழந்தை தொடர் சிகிச்சையில் உள்ளது.


ரேபீஸ் எச்சரிக்கை அவசியம்:


ஆண்டுதோறும் செப்டம்பர் 28 சர்வதேச ரேபீஸ் நோய்த் தடுப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் ஆசியாவிலும், ஆசிய அளவில் இந்தியாவிலும்தான் ரேபீஸ் நோய்களால் உயிரிழப்புகள் அதிகம் நேரிடுகின்றன.
குறிப்பாக, 15 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் பலியாகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 60,000 பேர் ரேபீஸ் நோயால் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் இந்நோய் குறித்த அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பு இல்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.


ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய், பூனை, குரங்கு, நரி, வவ்வால், கீரிப்பிள்ளை, ஆடு, மாடு போன்ற விலங்குகள் மற்ற விலங்குகளையோ அல்லது மனிதரையோ கடிக்கும்போது இந்நோய்ப் பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ் நீரிலேயே ரேபீஸ் வைரஸ் துகள்கள் இருக்கும். ஆகையால் ரேபீஸ் தாக்கிய விலங்கு திறந்த உடல் காயங்களில் நாவினால் தீண்டினாலும் இந்த நோய் தாக்கக்கூடும். மூளையைத் தாக்கி நரம்பு மண்டலத்தை சிதைத்து மரணத்தை ஏற்படுத்துகிறது.


ஆபத்துகள்:


வெறிநாய் கடித்த 2 முதல் 12 வார காலத்திற்குள் காய்ச்சலுடன் நோய் அறிகுறி ஆரம்பிக்கும். சில நேரங்களில் 6 வருடத்தில் கூட நோய் அறிகுறி தெரியலாம். தூக்கமின்மை, படபடப்பு, பயம், உடற் பாகங்கள் செயலிழத்தல், பழக்கவழக்கங்களில் மாற்றம், அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், தண்ணீரைப் பார்த்து அச்சம், குழப்பம், நினைவாற்றல் குறைதல் போன்ற அறிகுறிகள் தென்படும். பொதுவாக ரேபீஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் 2 முதல் 10 நாட்களுக்குள் இறந்துவிடுவார்கள். செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் தவறில்லை. ஆனால், அவற்றை கவனமாகப் பராமரிக்க வேண்டும். நமக்கெல்லாம்


ரேபீஸ் மட்டுமே நாய் கடித்தால் வரும் என்று தெரிந்துவைத்துள்ளோம். ரேபீஸ் தவிர 'எக்கினோகாக்கஸ்' என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் 'ஹைடாட்டிட்' என்ற கொடிய நோயும், நாயினால் பரவுகிறது. இதுபோல் நாயின் ரோமங்களால் ஏற்படும் சுவாசக்கோளாறு என நிறைய உள்ளன.


நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?


நாய்க்கடித்தவுடன் அந்த இடத்தை சோப்பு போட்டு குறிப்பாக கார்பானிக் அமிலம் அதிகமுள்ள சோப்பு கொண்டு 5 நிமிடங்களுக்கும் குறையாமல் நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர் அந்த இடத்தில் மருந்தகங்களில் கிடைக்கும் போவிடோன் ஐயோடின் களிம்பைப் பூச வேண்டும். இதனால் காயத்தில் உள்ள வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இது வெறும் முதலுதவி.


மருத்துவரின் அறிவுரைப்படி 0, (அதாவது நாய் கடித்த நாள்), 3, 7, 14, 28 மற்றும் 45-வது நாட்களில் தடுப்பூசியைத் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். தொப்புளைச் சுற்றி தடுப்பூசி என்றெல்லாம் அச்சப்படத் தேவையில்லை. தற்போதெல்லாம் கைகளில் போடப்படுகிறது. தெருநாய் கடித்திருந்தால் கடித்த நாயை 10 நாட்களாவது கண்காணிக்க வேண்டும். அதற்குள் நாய் இறந்துவிட்டால் நகராட்சி, மாநகராட்சியில் தெரிவித்தால் அந்தப் பகுதியில் வசிப்போருக்கு எச்சரித்து தடுப்பூசி போடப்படும்.