Gold One Nation One Rate: தங்கத்தை ஒரே நாடு ஒரே விலை திட்டத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


ஒரே நாடு ஒரே விலை திட்டத்தில் தங்கம்:


நாட்டின் பல்வேறு நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைககள் வேறுபடுகின்றன. ஒவ்வொரு மாநில அரசுகளாலும் விதிக்கப்படும் வெவ்வேறு வரிகள் மட்டுமின்றி, தங்கம் மற்றும் வெள்ளி நகை விலையில் பல காரணிகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.  இதன் காரணமாக, இந்த உலோகங்களின் விலையும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். ஆனால், இப்போது நாட்டில் பெரிய மாற்றம் வந்து கொண்டிருக்கிறது.


'ஒரே நாடு, ஒரே விலை' கொள்கை விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்குப் பிறகு நாட்டின் எந்த பகுதியில் தங்கம் வாங்கினாலும் ஒரே விலையாக தான் கிடைக்கும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் தங்க வியாபாரிகள் மற்றும் நகை வியாபாரிகளுக்கும் தொழில் எளிதாகிவிடும். நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நகைக்கடைகளும் இதை செயல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஜெம் அண்ட் ஜூவல்லரி கவுன்சிலும் ஆதரவு:


தங்கம் விலையை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட உள்ள,  'ஒரே நாடு ஒரே விலை' கொள்கைக்கு ரத்தினம் மற்றும் நகை கவுன்சிலும் (ஜிஜேசி) ஆதரவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தங்கத்தின் விலை ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதே இதன் கொள்கையின் நோக்கமாகும். 2024 செப்டம்பரில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, இந்தக் கொள்கையை அமல்படுத்திய பிறகு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள,  தங்கத் தொழில்துறையினர் புதிய திட்டங்களையும் வகுக்க தொடங்கியுள்ளனர்.


புதிய திட்டத்தால் என்ன மாற்றம் வரும்?


புதிய திட்டத்தால் நாடு முழுவதும் தங்கத்தின் விலையை சமன் செய்ய மத்திய அரசு விரும்புகிறது. இந்தக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு, நீங்கள் டெல்லி, மும்பை, சென்னை அல்லது கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் இருந்தாலும் அல்லது சிறிய நகரங்களில் தங்கம் வாங்கினாலும் விலை ஒரே மாதிரியாக இருக்கும்.  இந்தக் கொள்கையின்படி, தங்கத்திற்கு எல்லா இடங்களிலும் ஒரே விலையை நிர்ணயிக்கும் அமைப்பை அரசாங்கம் உருவாக்கும். அந்த அமைப்பின் முடிவுகளை நகை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும்.


விலை குறையலாம், நகைக்கடைகளும் கட்டுப்படுத்தப்படும்..!


”ஒரே நாடு ஒரே விலை” கொள்கையை அமல்படுத்தினால் சந்தையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். தங்கத்தின் விலையில் உள்ள வித்தியாசத்தால், அதன் விலையும் குறையலாம். இது தவிர, சில சமயங்களில் தன்னிச்சையாக தங்கம் விற்பனை செய்யும் நகைக்கடைக்காரர்களும் கட்டுப்படுத்தப்படுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, சென்னையில் சவரனுக்கு ரூ.54000-க்கும் அதிகமாக உள்ளது.