பிரசித்திபெற்ற திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் சந்திரபாபு குற்றச்சாட்டு
ஆந்திர பிரதேச மாநிலத்தில் முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவன பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் , லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு கூறியிருந்தார்.
பக்தர்களால் மிகவும் பிரசாதமாக கருதப்படும் திருமலை லட்டுகள், சுத்தமான நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தி கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். கோயிலில் பிரசாதம் தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிரசாதத்தின் தரத்தை மீட்டெடுத்துள்ளதாகவும், தூய்மையான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகவும் சந்திரபாபு கூறினார்.
ஆய்வில் உறுதி
இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, புகழ்பெற்ற திருப்பதி லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதை குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் உள்ள கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையம் ( CALF ) ஆய்வகத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் லட்டில் சேர்க்கப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
அதிர்ச்சியில் பக்தர்கள்
இந்நிலையில், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவன பரிசோதனையில் முந்தைய ஒய்எஸ்ஆர்சிபி ஆட்சியின் போது திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு தடயங்கள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி கோயில் என்பது இந்து கோயில்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கு அசைவம் என்பது முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. பக்தர்களும் கடும் விரதம் இருந்து, கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருப்பதி என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது லட்டு தான். இந்த சூழலில், திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக, முதலமைச்சரே குற்றச்சாட்டு வைத்த நிலையில், தற்போது ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.