இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கம் அதிகளவில் பரவி வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய அம்மாநில அரசு, கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் தற்போது 15 நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் நேற்று ஒரு நாள் மட்டும் 68 ஆயிரத்து 631 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 468 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் மகாராஷ்ட்ராவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 503 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மும்பையில் மட்டும் 53 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால். உயிரிழப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் உயிரிழப்பு விகதம் 1.58 சதவீதமாகவும், மும்பையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.18 சதவீதமாகவும் உள்ளது.
மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை தற்போது வரை 38 லட்சத்து 39 ஆயிரத்து 338 நபர்களாக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 388 நபர்களும், மும்பையில் மட்டும் 86 ஆயிரத்து 688 நபர்களும் சிகிச்சையில் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர் எண்ணிக்கை 31 லட்சத்து 6 ஆயிரத்து 828 ஆக உள்ளது. வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 75 ஆயிரத்து 518 ஆக உள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 18-ந் தேதி வரை, 10 லட்சத்திற்கும்( ஒரு மில்லியன்) அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 5.93 லட்சம் நபர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டதே, இதுவரை ஒரு மாதத்தில் அதிகபட்ச பாதிப்பாக அந்த மாநிலத்தில் இருந்தது. ஆனால், தற்போது 18 நாட்களிலே அந்த மாநிலத்தில் 1 மில்லியன் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது, மகாராஷ்ட்ரா மட்டுமின்றி நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தொழில் நகரமாக மும்பை இருப்பதால் தற்போது அங்கு நிலவி வரும் பாதிப்பு பல்வேறு பாதிப்புகளை தேசிய அளவில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் உள்ளிட்ட பொருளாதார இழப்பு குறியீடுகள் காலையிலிருந்தே துவங்கிவிட்டன.
இதே நிலை தொடர்ந்தால் மும்பையின் தீவிர ஊரடங்கு போடும் சூழல் ஏற்படலாம். அவ்வாறு முழு ஊரடங்கு போடப்படும் நிலையில் மும்பையை மையமாக வைத்து இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடையும். ஏற்கனவே ஊரடங்கால் அங்குள்ள தொழிற்சாலைகள் கடும் பாதிப்பை சந்தித்த நிலையில், தற்போது அங்கு அதிகரித்து வரும் கொரோனா தொற்று முதலீட்டாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.