ஒவ்வொரு மாநில மக்களும் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையை பின்பற்றி ஆண்டுதோறும் முக்கியமான பண்டிகை ஒன்றை சிறப்பாக கொண்டாடுவார்கள். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அறுவடை நாளாகவும், சூரிய பகவானை கொண்டாடும் விதமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் எப்படி பொங்கல் பண்டிகை சாதி, மத பேதமின்றி கொண்டாடி வருகிறார்களோ, அதேபோல், மலையாள மொழி பேசும் கேரளாவினருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஓணம் பண்டிகை ஆகும்.
ஓணம் பண்டிகை:
வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி மன்னனை அழித்ததும், அந்த மகாபலி மன்னன் வருடத்திற்கு ஒருநாளான ஆவணி திருவோண தினத்தில் தனது மக்களை பார்க்க வருவதுமே ஓணம் பண்டிகை ஆகும். இதை ஆண்டுதோறும் கேரளாதோறும் எந்தவொரு சாதி, மதம், இன வேறுபாடு மின்றி அனைவராலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
கேரளாவில் ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் சுமார் 10 நாட்கள் வரை கொண்டாடி மகிழ்வார்கள். அதாவது, மலையாளத்தில் சிம்ம மாதமான இந்த மாதத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் (நாளை) 29-ஆம் தேதி வரை என 10 நாட்கள் திருவோண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் மிகப்பெரிய திருவிழாவான திருவோண நட்சத்திரத்தில் வரும் திருவோண பண்டிகை நாள் (நாளை) வருகின்ற 29-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அஃப்சானா பர்வீன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், நாளை ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக கேரளாவில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.
அந்தவகையில், கொல்லம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அஃப்சானா பர்வீன், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அஃப்சானா பர்வீன் பாரம்பரிய ஓண பாட்டுடன் கிளாசிக்கலாக தொடங்கி, இறுதியாக சினிமா பாடலுக்கு குத்து நடனம் ஆடினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
2014-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சியை முடித்த அஃப்சானா, பீகாரில் உள்ள முசாஃபிர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்றவர். சொந்த ஊர் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சி என்பது குறிப்பிடத்தக்கது.