எல்லா வருடமும் திருவோணம் நட்சத்திரத்தைக் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையை ஒட்டி புதிய துணி உடுத்தி, வீட்டில் மலர்கோலம் இட்டு, விதவிதமான கூட்டு பொரியல், அவியல், குழம்பு வகைகள் கொண்டு விருந்து வைப்பது வழக்கம். அதற்கு பெயர் சத்யா என்று மலையாளத்தில் கூறுவார்கள். அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என மொத்தம் 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதில் கடைசி நாளான திருவோணம் முக்கியமாப நாளாகிறது. ஓணம் திருநாளில் மகாபலி பூவுலகுக்கு வருவதாக கேரள மக்கள் நம்புகின்றனர். இதற்காக அவரை வரவேற்கும் வகையில் மொத்தம் 10 நாட்கள் இந்த பண்டிகையை அவர்கள் கொண்டாடுகின்றனர். மக்களைக் காண வரும் மன்னன் மகாபலியை வண்ண மலர்களால் கோலமிட்டு வரவேற்பது வழக்கம். இந்த சிறப்பான ஓணம் திருநாளில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் ஓணம் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்களை கூறி உள்ளனர். 


கேரள முதல்வர் பிணராயி விஜயன், "ஓணம் என்பது மனித குலத்தின் பண்டிகை. சகோதரத்துவம், செழிப்பு மற்றும் சமத்துவம் நிறைந்த இந்த சிறந்த நாளில் ஒற்றுமையுடன் இருப்போம் என்ற செய்தியைப் பகிர்வதன் மூலம் இந்த ஆண்டு ஓணத்தைக் கொண்டாடுவோம். புதிய விடியலை, நன்மையால் பிரகாசமாக வரவேற்போம். அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்", என்று ட்வீட் செய்து இருந்தார்.






தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில் மலையாளத்தில் ட்வீட் செய்துள்ளார். அவருடைய பதிவில், "மாவேலி மன்னனை மலர் கொண்டு வரவேற்கும் மலையாள உடன்புறப்புகளுக்கு ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்! எத்தனை கட்டுக்கதைகள் கட்டப்பட்டாலும், ஒரு சரியான மன்னன் மக்கள் மனதிலிருந்து நீங்க மாட்டான். ஓணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று தமிழ் இலக்கியமும் சொல்கிறது. திராவிடர்களின் ஒற்றுமையை பறைசாற்றுகிறது. வேறுபாடுகள் களைந்து, உறவுகளை மேம்படுத்த ஒன்றுகூடுவோம்", என்று பதிவிட்டுள்ளார்.






அதே போல பிரதமர் மோடியும் மலையாளத்தில் வாழ்த்து கூறி உள்ளார். அவருடைய பதிவில், "எல்லோருக்கும் ஓணம் வாழ்த்துக்கள், குறிப்பாக கேரள மக்களுக்கும், உலகெங்கும் உள்ள மலையாளிகளுக்கும். இயற்கையின் முக்கியத்துவத்தையும், உழைக்கும் விவசாயிகளையும் இந்த பண்டிகை நினைவு கூறுகிறது. இந்த ஓணம் சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்த வழிவகை செய்யும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.






ஒ.பன்னிர்செல்வம் ட்விட்டரில், "பாரம்பரியமும் பண்பாடும் மிகுந்து, அன்பின் உறைவிடமாகவும், ஈகைப் பண்பின் அடையாளமாகவும் திகழும் ஓணம் பண்டிகையை உவகையோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது "ஓணம் திருநாள்" நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.






எடப்பாடி பழனிச்சாமி, "பாரம்பரிய சிறப்பு மிக்க #ஓணம் பண்டிகையை,வசந்தகால விழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள், இந்நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பும், அமைதியும் நிலவி; மகிழ்ச்சியும், செல்வமும் பெருகிட வாழ்த்துகிறேன்", என்று தெரிவித்துள்ளார்.






தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "அனைத்து மலையாள சகோதர சகோதரிகளுக்கும் ஓணம் வாழ்த்துக்கள். மன்னன் மகாபலியின் வருகையை நினைவுகூரும் இந்த அறுவடைத் திருவிழாவும், கொண்டாட்டமும் நமக்கு செல்வம், செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும்!", என்று தெரிவித்துள்ளார். 






மலையாள நடிகர் மோகன்லால் அனைவருக்கும் திருவோணம் வாழ்த்துக்கள் கூறி ஒரு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 






மலையாள நடிகர் மம்முட்டி அனைவருக்கும் திருவோணம் வாழ்த்துக்கள் கூறி புதிய உடை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.