கர்னி சேனா என்ற வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த 28 வயது நபர், பழைய தகராறு காரணமாக, மத்தியப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இடார்சியில் உள்ள கர்னி சேனாவின் நகரச் செயலாளர் ரோஹித் சிங் ராஜ்புத், பேரூராட்சி அலுவலகம் முன் மூன்று நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சச்சின் படேலும் கத்தியால் குத்தப்பட்டார்.


 






கத்தி குத்துப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ராஜ்புத் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. படேல் ஆபத்தான நிலையில் உள்ளார். ரோஹித் சிங் ராஜ்புத் பழைய தகராறின் காரணமாக கொல்லப்பட்டுள்ளார். இடார்சி காவல் நிலையப் பொறுப்பாளர் ஆர்.எஸ்.சௌஹான், கொலையில் முக்கிய குற்றவாளி 27 வயதான ராணு என்கிற ராகுல் என்று கூறியுள்ளார்.


பாதிக்கப்பட்ட நபரும் அவரது நண்பரும் ஒரு தேநீர் கடைக்கு அருகிலுள்ள பிரதான சந்தைப் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று பேர் அவர்களுக்கு அருகே சென்றுள்ளனர். இதையடுத்து அவர்களிடையே சண்டை நடைபெற்றது. வாக்குவாதத்தின் போது, ​​அவர்களில் ஒருவர் திடீரென கத்தியை எடுத்து ராஜ்புத்தை பலமுறை குத்தியுள்ளார்.


குற்றம் சாட்டப்பட்ட ராகுல் ராஜ்புத், அங்கித் பட் மற்றும் இஷு மாளவியா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அங்கித் பட் என்பவரின் வீடு சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் மதன் ரகுவன்ஷி, சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி மகேந்திர சவுகான் மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் அத்துமீறி கட்டியதாகக் கூறி இடிக்கப்பட்டது. 


குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரின் வீடுகளும் இடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து நாட்களுக்கு முன், அதே பகுதியில், அபிஷேக் மாளவியா என்ற வங்கி ஊழியர், குற்றவாளிகளால் தாக்கப்பட்டார். முன்னாள் சபாநாயகரும், உள்ளூர் பாஜக எம்எல்ஏவுமான டாக்டர் சீதாசரண் சர்மா, அதே இரவில் காவல் நிலையத்திற்கு வந்து, நகரில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.


மின்சாரத் துறை அலுவலர்களின் தவறான நடத்தையைக் குற்றம் சாட்டி, சர்மா சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் நகரத்தில் போராட்டம் நடத்தினார்.