டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி  மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மும்பை அருகே பால்கர் அருகே நடந்த கார் விபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார்.






அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் திரும்பி கொண்டிருந்த போது, அவரின் காரானது பால்கர் என்ற இடத்தில் சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.  இவ்விபத்தில்  சிக்கி சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த இருவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இருவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பிரதமர் இரங்கல்:


இந்நிலையில் சைரஸ் மிஸ்திரி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 






சைரஸ் மிஸ்திரியின் அகால மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இந்தியாவின் பொருளாதார வலிமையில் நம்பிக்கை கொண்ட ஒரு நம்பிக்கைக்குரிய வணிகத் தலைவராக இருந்தார். அவரது மறைவு வர்த்தகம் மற்றும் தொழில்துறை உலகிற்கு ஒரு பெரிய இழப்பு ஆகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என பிரதமர் இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிரா முதல்வர்:


மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோராக மட்டுமல்லாமல், ஒரு இளம், பிரகாசமான மற்றும் தொலைநோக்கு ஆளுமையாக தொழில்துறையில் காணப்பட்டார். அவரின் மறைவு மிகப்பெரிய இழப்பு என ஏக்நாத் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.