2022ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவின் alt news செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரதிக் சின்ஹா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலை நார்வே நோபல் கமிட்டி வெளியிடவில்லை.


 






புகழ்பெற்ற டைம் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் செய்தி இணையதளமான alt news நிறுவனர்கள் பிரதிக் சின்ஹா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


நார்வேயின் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐந்து நபர்கள் கொண்ட நார்வே நோபல் கமிட்டியால் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பிரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


பெலாரஷ் எதிர்க்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகனுஸ்காயா, பிரிட்டன் ஒளிபரப்பாளர் டேவிட் அட்டன்பரோ, உலக சுகாதார அமைப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், போப் பிரான்சிஸ், துவாலுவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சைமன் கோஃப் மற்றும் மியான்மரின் தேசிய ஒற்றுமை அரசு ஆகியோரது பெயர்களை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.


ராய்ட்டர்ஸ் நிறுவனம் அவர்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரிய வந்துள்ளது. வெற்றியாளர் யார் என்பதை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை கணித்துள்ளனர்.


கடந்த 2018ஆம் ஆண்டு பதிவிட்ட ட்விட்டின் மூலம் ஆத்திரமூட்டும் வெறுப்பு உணர்வுகளைத் தூண்டியதாக முகமது ஜுபைர் மீது இந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.


மதத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததற்காகவும், மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்றே செயல்பட்டதாகவும் டெல்லி காவல்துறை அவர் மீது குற்றம் சாட்டியது.


முகமது ஜூபைர் கைது செய்யப்பட்டதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்க அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் குறைந்துள்ளது. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு விரோதமான மற்றும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது. 


உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகுதான், ஜூபைர் திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் சுமார் 343 வேட்பாளர்கள் உள்ளனர். 251 பேர் தனிநபர்கள் மற்றும் 92 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளனர்.