சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவருக்கும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா தொடர்பாக பல்வேறு தவறான தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
இதையடுத்து, புதிய வகை கொரோனா குறித்து பரவி வரும் தவறான தகவல்களை அம்பலப்படுத்தும் விதமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் பொய்யானவை என்றும் தவறாக வழிநடத்தும் நோக்கில் இருப்பதாகவும் அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட அந்த தவறான செய்தியின்படி, "கோவிட் ஒமைக்ரான் XBB கொரோனா வகை முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக உள்ளது. இது, உயிர்கொல்லியாக இருப்பதால் இந்த வகை கொரோனாவை கண்டறிவது எளிதல்ல" என குறிப்பிடப்பட்டுள்ளது.
BA.5 ஒமைக்ரான் வகை கொரோனாவில் இருந்துதான் BF.7 வகை கொரோனா உருமாறியுள்ளது. இதன் பரவல் தன்மை தீவிரமாக உள்ளதால், நோய் தன்மையும் அதிகமாக உள்ளது.
தொற்று ஏற்பட்ட உடனேயே இதன் அறிகுறிகள் உடலில் தெரிந்துவிடும். அதேபோல, பாதிப்புக்கு உள்ளானவர்களை மீண்டும் தாக்கும் திறன் இந்த வகை கொரோனாவுக்கு உள்ளது. குறிப்பாக, தடுப்பூசி செலுத்தியவர்களும் இந்த வகை கெரானாவால் பாதிக்கப்படலாம்.
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடி கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
அறிவியல் உலகின் தொடர் முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது கட்டுப்பாட்டில் வரவழைக்கப்பட்டது. கொரோனா எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இருந்தபோதிலும், பல மாதங்களாக சீனாவில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இதை தொடர்ந்து, பொருளாதார தாக்கத்தின் காரணமாகவும் மக்கள் போராட்டத்தின் விளைவாகவும் பூஜ்ய கொரோனா கட்டுப்பாடுகள் அங்கு திரும்பபெறப்பட்டது.
இதன் எதிரொலியாக, சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சீனாவை பொறுத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,242 பேர் இறந்துள்ளனர். 3 லட்சத்து 83 ஆயிரத்து 175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் இடம் இல்லாததால் தரையில் படுக்க வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.