பல துறைகளில் உயரிய விருதுகளை பெற்றவர்கள் இந்திய ராணுவத்தால் பதவிகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில், இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கும் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

நீரஜ் சோப்ராவிற்கு லெப்டினன்ட் கர்னல் பதவி

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவிற்கு, இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இதற்கான விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக, நீரஜ் சோப்ராவிற்கு பத்மஸ்ரீ, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்தியாவின் ‘தங்க மகன்‘ ஆன நீரஜ் சோப்ரா

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நீரஜ் சோப்ரா ஜூனியர் கமிஷன்டு அதிகாரியாக இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். கடந்த 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், தடகளத்தில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றை பதிவு செய்தார் நீரஜ் சோப்ரா. 2024-ம் ஆண் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும், 2023-ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும் வென்று நீரஜ் சாதனை படைத்தார்.

மேலும், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, டயமண்ட் லீக் போட்டிகளிலும் பல தங்கப் பதக்கங்களையும் நீரஜ் சோப்ரா வென்றுள்ளார். அதோடு, ஈட்டி எறிதலில், 90.23 மீட்டர் எறிந்து இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லான சாதனைக்கு சொந்தக்காரராக உள்ள அவர் இந்தியாவின் தங்க மகனாக வலம் வருகிறார்.

இந்நிலையில், தடகளத்தில் நீரஜ் சோப்ராவின் சாதனைகளையும், லட்சக்கணக்கான இளம் இந்தியர்களை ஊக்குவிப்பதற்கான அவரது பங்களிப்பையும் கவுரவிக்கும் வகையில், அவருக்கு ராணுவத்தில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக ஆயுதப் படைகளில் கவுரவப் பதவிகளை பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் குழுவில் நீரஜ் இணைந்துள்ளார்.

நீரஜ்ஜிற்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

நீரஜ் சோப்ராவின் இந்த சாதனைகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். வருங்கால சந்ததியினருக்கு நீரஜ் சோப்ரா ஒரு உத்வேகமாக இருப்பதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், நீரஜ் சோப்ராவின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேசிய பெருமை ஆகியவற்றின் உயர்ந்த கொள்கைகளை உள்ளடக்கியவர் என்றும், விளையாட்டு, சகோதரத்துவம் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள தலைமுறைகளுக்கு நீரஜ் சோப்ரா ஒரு உத்வேகமாக சேவை செய்வதாகவும் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.