கேரள மாநிலம், சபரிமலைக்கு வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டரின் ஒரு பகுதி கான்க்ரீட்டில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. அவர் பம்பையில் இருந்து நடை பயணமாக சன்னிதானத்துக்குச் சென்று சாமி தரிசனம் செய்வார் என்றும், ஒருநாள் சபரிமலையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அவரின் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த மாதம் சபரிமலைக்கு வருவார் என கூறப்பட்டது.

கேரள மாநிலத்துக்குச் சென்ற குடியரசுத் தலைவர்

இந்த நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அக்.21 முதல் அக்.24 ஆம் தேதி வரையில் 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக, கேரள மாநிலத்துக்குச் சென்றுள்ளார். நேற்று (அக்.21) மாலை திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகையில் தங்கிய குடியரசுத் தலைவர் முர்மு, இன்று (அக்.22 ஆம் தேதி) சபரிமலை கோயிலில் தரிசனம் செய்கின்றார்.

Continues below advertisement

இதையடுத்து இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், பத்தினம்திட்டாவில் உள்ள பிரமதம் மைதானத்தில் தரையிறங்கியது. அப்போது ஹெலிகாப்டர் தளத்தின் ஒரு பகுதி ஹெலிபேட் அமைக்க உருவாக்கப்பட்ட கான்க்ரீட் பூச்சில் சிக்கின் கொண்டது. இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள், உடனடியாக ஹெலிகாப்டரை நேரே நிமிர்த்தி, வெளியே தள்ளினர்.

இருமுடி கட்டிய முர்மு

தொடர்ந்து பம்பை கணபதி கோயிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார்.

அடுத்த பயணத் திட்டம் என்ன?

தரிசனத்தை முடித்த பிறகு முர்மு, நாளை அதாவது அக்.23ஆம் தேதி கேரள ஆளுநர் மாளிகையில் குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர். நாராயணனின் சிலையை திறந்து வைக்கின்றார். மேலும், கோட்டயத்தில் உள்ள செயிண்ட் தாமஸ் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கின்றார்.

பின்னர், அக்.24 ஆம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள செயிண்ட் தெரசா கல்லூரியின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.