கர்நாடகா மாநிலத்தில் 63 வயது முதியவரிடம் டேட்டிங் செயலி மூலம் ரூ.33 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள ஹொரமாவு பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர், தனிமையில் அவதிப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து டேட்டிங் செயலி மூலம் தனக்கான துணையை தேட நாட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் தனது வாட்ஸ் அப் செயலியில் வந்த டேட்டிங் செயலி லிங் ஒன்றை அவர் கிளிக் செய்துள்ளார். அதில் அவரின் சுய விவரத்தை எல்லாம் பதிவு செய்த பிறகு உயர் ரக பெண்களுடன் டேட்டிங் சேவை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
இவரும் மிகவும் ஆவலுடன் அதனை அணுகியுள்ளனர். அப்போது உயர்மட்டப் பெண்களுக்கு உங்களை அறிமுகப்படுத்துவதாக கூறி, அந்த முதியவரை சில நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அதன்படி முதலில் ரூ.1,950 பதிவுக் கட்டணமாகச் செலுத்துமாறு கேட்கப்பட்டது. பின்னர் மூன்று பெண்களின் புகைப்படங்கள் அனுப்பி அதில் ஒருவரைத் தேர்வு செய்யுமாறு கூறியுள்ளனர். அதில் அவர் ரித்திகா என்ற பெண்ணுடன் தான் டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். பின்னர் அவருடன் வாட்ஸ்அப் செயலியில் உரையாடவும் தொடங்கியுள்ளார்.
இதனால் தான் உண்மையில் டேட்டிங் செயலியில் இருப்பதாக நம்பியுள்ளார். மேலும் ரித்திகாவை விரைவில் நேரில் சந்திப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனிடையே தசரா பண்டிகை வந்துள்ளது. அதற்கு சில நாட்கள் முன்பு ரித்திகா அந்த முதியவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தான் குடும்பத்தைப் பார்க்க ஊருக்கு செல்கிறேன். எனவே தன்னை சில நாட்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மேலும் தான் திரும்பி வரும் வரை வாட்ஸ் அப்பில் உரையாட பிரித்தீ என்ற பெண்ணையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இதனால் அந்த முதியவருக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த டேட்டிங் சேவையை தொடர கட்டணம், ஒருங்கிணைப்பு செலவு, உறுப்பினராக கட்டணம், சேவை கட்டணம் என பல வகைகளில் இந்த காலக்கட்டத்தில் அவரிடம் பணம் வசூலிக்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் அவர் பணத்தை செலுத்த முயற்சிக்கும் நேரத்தில் கூடுதல் பணம் தேவை என வற்புறுத்தி பெறப்பட்டது. இருந்தாலும் தன்னுடைய தனிமையைப் போக்கக்கூடிய பெண்ணை சந்திக்கப் போகிறேன் என்ற ஆசையில் இவரும் கொடுத்துள்ளார். இப்படியாக செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 18 வரை அந்த முதியவரிடம் ரூ. 32.2 லட்சம் பெறப்பட்டுள்ளது. ஒருசில நேரம் பணம் செலுத்த தாமதம் செய்தபோது அந்த முதியவரை எதிர்தரப்பு மிரட்ட தொடங்கியதால் அவருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூரு சைபர் கிரைம் பிரிவில் தான் மோசடி செய்யப்பட்டதாக புகாரளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.