உத்தரப்பிரதேசத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நபர் இடையில் தண்ணீர் குடித்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

தண்ணீர் குடித்த நிலையில் மரணம்

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நவம்பர் 5ம் தேதி புதன்கிழமை காலை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது 30 வயதான எல்ஐசி நிறுவனத்தின் மேம்பாட்டு அதிகாரி  மயங்கி விழுந்து உயிரிழந்தார். காவல்துறையினரின் விசாரணையில் அந்த நபர் ஜான்சியின் சிப்ரி பஜார் பகுதியில் உள்ள நல்கஞ்சில் வசிக்கும் ரவீந்திர அஹிர்வார் என கண்டறியப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் அவர் கிரிக்கெட் விளையாடிய நிலையில் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உடல்நிலை பிரச்னை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலைமையை சரி செய்ய தண்ணீர் குடித்த நிலையில் வாந்தி எடுத்து, சுயநினைவை இழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதனிடையே நேரில் பார்த்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்படி, இந்த சம்பவம் ஜான்சியில் உள்ள அரசு கல்லூரி (ஜிஐசி) மைதானத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு ரவீந்திர அஹிர்வார் பல வாரங்களுக்குப் பிறகு விளையாடச் சென்றார். நீண்ட  நாட்களுக்குப் பின் மீண்டும் விளையாட வந்ததால் அவர் மிகவும் உற்சாகமாகவும், விளையாடும் முன் நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்துள்ளார். நண்பர்களிடமும் ஜாலியாக பேசியபடியே விளையாடியுள்ளார். 

நீரிழப்பு என நினைத்த நண்பர்கள்

மேலும் காலையில் விளையாட செல்லும் முன் அதிகாலையில் எழுந்து வீட்டின் அருகில் உள்ள ஒரு கடையில் தனது தந்தையுடன் தேநீர் அருந்தியுள்ளார்.பின்னர் அவரிடம் விடைபெற்று விட்டு விளையாட சென்ற அவர் அடுத்த ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியும் கவலைக்குள்ளாக்கியும் உள்ளது.

கிரிக்கெட் போட்டியின்போது பந்து வீசிய அவர் இடையில் வீரர்கள் சிறிது ஓய்வெடுப்பதற்காக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதற்குள் அவர் சில ஓவர்கள் வீசிய நிலையில் சற்று சோர்வாக காணப்பட்டார். முதலில் அவரது சக வீரர்கள் ஆரம்பத்தில் அவர் நீரிழப்புடன் இருப்பதாக நினைத்தனர். அதனால் அதிக தண்ணீர் குடிக்க அறிவுறுத்தினர். எனினும் குடித்த சிறிது நேரத்திலேயே ரவீந்திர அஹிர்வார் வாந்தி எடுக்கத் தொடங்கி மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை எழுப்ப முயன்ற போது பேச்சு மூச்சின்றி கிடந்ததால் நிலைமையின் தீவிரத்தை விரைவாக உணர்ந்த சக நண்பர்கள் உடனடியாக மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளராக பணியாற்றும் டாக்டர் சச்சின் மஹோர் கூறுகையில், ரவீந்திர அஹிர்வார் உடலை பரிசோதனை செய்தபோது ஆரம்ப அறிகுறிகள் மாரடைப்பு ஏற்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகிறது. அவரது மரணத்திற்கான சரியான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியும் என கூறியுள்ளார். 

கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட ரவீந்திர அஹிர்வார் கடைசியில் அவருக்கு விருப்பமான கிரிக்கெட் மைதானத்திலேயே உயிரிழந்தது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது.