உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோத ஆக்கிரமப்பை அகற்றும்போது பற்றி எரிந்த தீயில் சிக்கி இரண்டு உயிர்கள் பரிதாபமாக பறிபோனது. உத்தரப்பிரதேச மாநில கான்பூர் திகாத் பகுதிக்கு உட்பட்ட மராவ்லி கிராமத்தில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட அரசு நிர்வாகத்தினர் சென்றனர். 


ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சென்றபோது, அங்கு குடிசை வீட்டில் இருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 


நீண்ட நேர சமாதானப் பேச்சுவார்த்தைகளை அவர்கள் ஏற்கவில்லை. ஒருகட்டத்தில் அதிகாரிகள் சரி இனி வலுக்கட்டாயமாக நடவடிக்கையை ஆரம்பிக்கலாம் என எத்தனித்தபோது தீ குளித்து விடுவோம் என்று மக்கள் மிரட்டி உள்ளனர். 


ஆனால் அவர்கள் அவ்வாறு மிரட்டிய சில நிமிடங்களில் அங்கு ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. அதில் சிக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் காயங்களுடன் தப்பினர். உயிரிழந்தவர்கள் பிரமீளா தீட்சித் (வயது 44) மற்றும் அவரது மகளான நேஹா தீட்சித் (வயது 22) ஆகிய இருவர் என அடையாளம் தெரியவந்துள்ளது. 


தீ விபத்தில் உயிர் பிழைத்த பிரமீளாவின் மகனான சிவம் தீட்சித் கூறும்போது, உள்ளூர்வாசிகளான அசோக் தீட்சித், அனில் தீட்சித் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிற நபர்கள் வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் நானும், எனது தந்தையும் உயிர் தப்பினோம். தாயாரும், சகோதரியும் உயிரிழந்தனர். ஒவ்வொரு அதிகாரிக்கும் இதில் தொடர்பு உள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். 


இதுபற்றி அவர்களது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் 12-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனினும், வீடு தீ பிடித்து எரிந்ததற்கான சரியான காரணம் எதுவென தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் உண்மையில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த பின்னர் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் நழுவிவிட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்ட்டி, கான்பூர் சரக ஏடிஜிபி அலோக் சிங் ஆகியோர் வந்த சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.


ஏற்கெனவே கடந்த மாதம் 14ஆம் தேதி பாதிக்கப்பட்ட நபரின் வீட்டுக்கு வந்த அதிகாரிகள் கிராம சபை நிலத்தில் சட்டவிரோதமாக வீடு கட்டியிருப்பதாகக் கூறி வீட்டின் ஒருபகுதியை இடித்துள்ளனர். அதன்பின்னர் அதே இடத்தில் குடிசையிட்டு அந்தக் குடும்பத்தினர் வசித்து வர நேற்று இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சிவம், எங்களது எதிரிகள் சிலர் அதிகாரிகளுடன் இணைந்து இந்த நாச வேலையில் ஈடுபட்டனர் என்றார். தன் குடும்பத்திற்கு நீதி வேண்டும் என்று அவர் கோரி வருகிறார்.