பொருளாதார மந்த நிலை காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அமேசான், கூகுள், டிஸ்னி, யாஹூ என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்:


இந்நிலையில், பணி நீக்கம் தொடர்பாக Naukri.com இணையதளம் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறைந்த அளவிலேயே பணி நீக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால், பணி நீக்கத்தால் ஐடி ஊழியர்களும் மூத்த ஊழியர்களே அதிக அளவில் பாதிக்கப்படுவர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்திய ஊழியர்கள் இந்த ஆண்டு கணிசமான ஊதிய உயர்வை பெறுவார்கள். அதாவது, சுமார் 20 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு பெறலாம் என கூறப்படுகிறது.


பணியமர்த்துபவர்கள், ஆலோசகர்கள் என 10 துறைகளில் இருக்கும் 1,400 பேரிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. பணி அமர்த்தும் பெரும்பாலான நபர்கள், 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் குறைவான பணிநீக்கங்களே இருக்கும் கணித்துள்ளனர்.


அதே நேரத்தில், கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட 4 சதவிகிதம் பேர், தங்கள் நிறுவனங்களில் பணி நீக்கம் அதிகம் இருக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.


ஐடி ஊழியர்களே உஷார்:


அதேபோல, பணி நீக்கத்தால் ஐடி ஊழியர்களும் மூத்த ஊழியர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவர். வணிக மேம்பாடு, சந்தைப்படுத்தல், மனித வளம் மற்றும் செயல்பாட்டு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பணி நீக்கம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.


இருப்பினும், புதிதாக வேலை தேடுவோர் பணிநீக்கத்தால் குறைந்த அளவில் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 சதவிகித ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து தானாகவோ அல்லது கட்டாயப்படுத்தியோ வெளியேற்றப்படலாம் என 50 சதவிகிதம் பணி அமர்த்துபவர்கள் கணித்துள்ளனர். இது, ஐடி துறையில் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


உலகளாவிய வேலை சந்தையில் நிச்சயமற்ற நிலை இருந்தபோதிலும், இந்தாண்டின் முதல் பாதியில் ஆட்சேர்ப்பு இருக்கும் என 92 சதவிகித பணி அமர்த்துபவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


இந்தியப் பணியாளர்கள் கணிசமான ஊதிய உயர்வுகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதி பணி அமர்த்துபவர்கள், 20 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு இருக்கும் எனகணித்துள்ளனர்.


வேலை தேடும் பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி:


ஆட்சேர்ப்பில் பாசிட்டிவான சூழல் நிலவுவதால், இந்தாண்டின் முதல் பாதியில் இந்திய ஊழியர்கள் நல்ல சம்பளத்தில் பணி அமர்த்தப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. கேம்பஸ் இன்டர்வியூவிலும் நம்பிக்கையான சூழல் நிலவுவதால் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி காத்திருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.