இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் அதிவேக ரயிலின் மீது அவ்வபோது கல் வீச்சு சம்பவம் நடந்து  வருகிறது. அந்த வகையில், ஒடிசாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீதும் மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஒடிசாவின் தேன்கனல் - அங்குல் ரயில்வே பிரிவில் மேரமண்டலி மற்றும் புதாபங்க் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கலை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் விளைவாக, ரூர்கேலா-புவனேஸ்வர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20835) ரயிலின் எக்சிகியூட்டிவ் வகுப்பு பெட்டியின் ஜன்னல் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






ரூர்கெல்லா புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் மீது கல் வீசப்பட்டதாக முதலில் ஆர்பிஎப் கவனத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ஆர்பிஎஃப் மற்றும் ஜிஆர்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்டாக்கில் இருந்து RPF இன் உதவி பாதுகாப்பு ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, வந்தே பாரத் ரயிலில் கல்வீச்சு சம்பவம் குறித்து உள்ளூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கற்களை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.


ரயில்வே துறையினர் இரண்டு பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள், உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து கல் வீசிய நபர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை ரயில்வே (ECOR) பொதுமக்களுக்கு, குறிப்பாக ரயில் பாதைகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு, ரயில்கள் மீது கற்களை எறியக் கூடாது என்றும், இந்த சம்பவங்கள் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ரயில்வே மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், ரயில்கள் மீது கல் வீச்சு சம்பவங்கள் நிறுத்தப்படவில்லை.


இது முதல்முறை அல்ல.. 


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீச்சு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி - போபால் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்கள் வீசப்பட்டன. இந்த தாக்குதலை அடுத்து கடந்த ஐந்து மாதங்களில் பதிவான 6வது சம்பவம் இதுவாகும். நாட்டின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. நல்லவேளையாக இதுவரை எந்த ஒரு சம்பவத்திலும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.


இதேபோல், கடந்த மே மாதத்தில் கூட, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது மர்ம நபர்கள் கற்களை வீசினர். இதுகுறித்து சம்பவத்தின்போது தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ”திருநாவாயா - திரூர் இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது கல் வீச்சு நடந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.