கடந்த வெள்ளிக்கிழமை, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இறுதிகட்ட மீட்பு பணிக்கு பிறகு, 288 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.


இரண்டு முறை எண்ணப்பட்டதா இறந்த உடல்கள்?


ஆனால், சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டது கண்டறியப்பட்டதாகவும் எனவே, மொத்த பலி எண்ணிக்கை 288 அல்ல. 275 பேர் உயிரிழந்திருப்பதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை திருத்தப்பட்டது தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா சந்தேகத்தை கிளப்பினார்.


இறந்த உடல்களை எண்ணுவதில் குளறுபடி நடந்திருப்பதாக பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், உயிரிழ்தோர் எண்ணிக்கை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் 288 பேர் இறந்ததாக ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று பேசுகையில், "மாவட்ட மருத்துவமனைகள், பிணவறைகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களின் கலெக்டர்களின் அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, பாலசோரின் ஆட்சியர் இறப்பு எண்ணிக்கையை 288ஆக உறுதி செய்துள்ளார். இதுவரை 205 உடல்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. 


மருத்துவமனைகளில் குவிந்துள்ள அடையாளம் தெரியாத உடல்கள்:


மொத்தமுள்ள 288 உடல்களில், 95 மாவட்ட அளவில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், 193 உடல்கள் புவனேஸ்வருக்கு கொண்டு வரப்பட்டன. புவனேஸ்வருக்கு கொண்டு வரப்பட்டவர்களில், 110 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 83 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை" என்றார்.


பாலசோரில் நடந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து, புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைகளில் ஏராளமான அடையாளம் தெரியாத உடல்கள் குவிக்கப்பட்டுள்ளன. உடலை கேட்டு வருபவர்களிடம் எய்ம்ஸ் மருத்துவமனை டிஎன்ஏ சோதனை நடத்தி வருகிறது. இதுவரை 10 உடல்களுக்கு டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர். பிரவாஸ் திரிபாதி கூறுகையில், "தீவிர விசாரணைக்குப் பிறகு உடல்கள் உறவினருக்கு தரப்படுகின்றன. பல குடும்பங்கள் ஒரே உடலைக் கோருவதால், டிஎன்ஏ மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. டிஎன்ஏ மாதிரி அறிக்கைகளைப் பெற 7 முதல் 10 நாட்கள் ஆகலாம்" என்றார்.


கண்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள இறந்த உடல்கள்:


உடல்களை பதப்படுத்தி வருவது குறித்து பேசிய அவர், "உடல்கள் இப்போது கண்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது" என்றார். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மேற்குவங்கம், பிகார், ஜார்க்கண்ட், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசாவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.


இந்த விபத்து தொடர்பாக சிபிஐ இன்று விசாரணை தொடங்கியுள்ளது. நேற்று ஒடிசா காவல்துறை ரயில் விபத்து தொடர்பாக ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், விசாரணை இன்று சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.