ஒடிசாவில் நேர்ந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.
கோர விபத்து:
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தன இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
அடையாளம் காணமுடியாத உடல்கள்:
இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 280-ஐ கடந்துள்ளது. 900-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த விபத்தில் சிக்கிய பலரது கை, கால்கள் துண்டானதோடு, பலர் உடல் முழுவதும் நசுங்கியும், தலை துண்டாகியும் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்த பலரை அடையாளம் காண முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம், அங்குள்ள உடல்கள் அனைத்தும் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
மாநில அரசு நடவடிக்கை:
இதுதொடர்பாக பேசியுள்ள ஒடிசா மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா “அடையாளம் காணப்பட்ட உடல்களை ஒடிசா அரசு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்து வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாளம் காண முடியாத உடல்கள் தொடர்பாக சட்டப்பூர்வ நடைமுறை பின்பற்றப்படும். தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 7 குழுக்கள், மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 5 குழுக்கள், தீயணைப்பு பிரிவை சேர்ந்த 24 குழுக்கள், உள்ளூர் காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் என ஏராளமானோர் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்படுவது எப்படி?
அடையாளம் தெரியாத அளவில் சிதிலமடைந்தவர்களின் உடல்களை, முதலில் அவர்களுக்கு உள்ள பல்வேறு தழும்புகள் மற்றும் மச்சங்கள் போன்றவற்றை கொண்டு உறவினர்கள் உதவியோடு சரியாக அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதைதொடர்ந்து, டி.என்.ஏ பரிசோதனை மூலம் இறந்தது யார் என்பது உறுதிப்படுத்தப்படும். ஒருவேளை இறுதிவரை ஒரு உடல் அடையாளம் காணப்படாவிட்டாலோ, அல்லது யாரும் உரிமை கோராவிட்டாலோ, அந்த உடலை மாநில அரசின் சார்பில் காவல்துறையினரே அடக்கம் செய்துவிடுவர்.