ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 101 பேர் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்த 55 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டது. இந்த ரயில் விபத்தால் 275 உயிர்கள் பறிபோனதோடு, 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று மாலை கிழக்கு மத்திய ரயில்வேயின் கோட்ட ரயில்வே மேலாளர் ரிங்கேஷ் ராய் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ இந்த கொடூர ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 101 உடல்கள் அடையாளம் காணப்பட முடியவில்லை. காயமடைந்த சுமார் 200க்கு மேற்பட்டோர் ஒடிசாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதை தொடர்ந்து, புவனேஸ்வர் மாநகராட்சி ஆணையர் விஜய் அம்ரித் குலங்கே பேசுகையில், “ புவனேஸ்வரில் வைக்கப்பட்டுள்ள மொத்தம் 193 உடல்களில் 80 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 55 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட 1929 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு 200க்கு மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. இறந்த உடல்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்” என தெரிவித்தார்.
இந்தியா இதுவரை காணாத மிக மோசமான ரயில் விபத்தை கண்ட சில நாட்களுக்குப் பிறகு, ஒடிசா நிர்வாகம் ரயில் சேவைகளை மீண்டும் மீட்டெடுத்து வருகிறது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் 55 உடலை அடையாளம் கண்டுள்ளோம். இருப்பினும், பல உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாததால், இறந்த உடல்களை அடையாளம் காண்பதில் ஒடிசா நிர்வாகம் சிரமங்களை எதிர்கொள்கிறது என்று ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் தெரிவித்தார்.
என்ன தண்டனை..?
ஒடிசா ரயில் விபத்து காரணமானவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், 337, 338, 304A (ஜாமீனில் வெளிவர முடியாதது) மற்றும் 34 (அலட்சியத்தால் ஏற்படும் மரணங்கள்) ஆகிய பிரிவுகளின் கீழும் ரயில்வே சட்டம் 153, 154 மற்றும் 175 (பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பது) ஆகிய பிரிவுகள் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
275 பேரின் உயிரை எடுத்துக்கொண்ட ரயில் விபத்து:
கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மாலை நடந்த கோர விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்திருப்பதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைவதற்கு காரணமான இந்த விபத்தானது 21ம் நூற்றாண்டில் இந்திய ரயில்வே வரலாற்றில் மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது.
விபத்து எப்படி நடந்தது, அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் பல்வேறு நபர்களால் தெரிவிக்கப்பட்டாலும், சிக்னல் கொடுப்பதில் ஏற்பட்ட குறைபாடு, அதி வேகமாக ரயில்கள் இயக்கப்பட்டதே ரயில் விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது. இருப்பினும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரயில்வே நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது.