ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கடந்த 2ஆம் தேதி மாலையில், 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 1000க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், உடல் நசுங்கி பலியான பலரது உடல்கள் இதுவரை அடையாளம் காணமுடியாத சூழலில் தான் உள்ளன. 


ஒடிசா ரயில் விபத்துக்கு மசூதி காரணமா..?


இதனிடையே, நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம், விபத்து நிகழ்ந்த இடத்தில் துரித கதியில் மறுசீரமைப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வந்தது. தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டன. 


விபத்து நிகழ்ந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்ட நிலையில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்திலேயே கடந்த 3 தினங்களாக இருந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டார். 


இம்மாதிரியான நெருக்கடியான காலக்கட்டத்தில் கூட, சமூக விரோதிகள் சிலர், இதற்கு மதவெறி சாயம் பூச முற்பட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. ரயில் விபத்து நடந்த பகுதி அருகே இருந்த வெள்ளை கட்டிடம் மசூதி என்றும் இந்த விபத்துக்கும் இஸ்லாமியர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் வெறுப்பை பரப்பினர்.


ஒடிசா காவல்துறை விளக்கம்:


இந்த பதிவுகள் வைரலான நிலையில், இது தொடர்பாக ஒடிசா காவல்துறை விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. "கொடூரமான ரயில் விபத்துக்கு வகுப்புவாத வண்ணம் கொடுக்கப்படுகிறது" என காவல்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.


இதற்கு பின்னர்தான், விபத்து நடந்த பகுதி அருகே இருந்த வெள்ளை கட்டிடம் மசூதி அல்ல என்றும் இஸ்கான் கோயில் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து இஸ்கான் கோயில் தலைவர் சைதன்ய சந்திர தாஸ் கூறுகையில், "ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டப்பட்டது. இதற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றார்.


இம்மாதிரியான நெருக்கடியான காலக்கட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆனால், ஒரு சிலர், மதவெறியுடன் பொய் செய்திகளை பரப்பி வரும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. எனவே, இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


ரயில் விபத்துக்கு காரணம் என்ன?


ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருந்தார். ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு ரயில்களின் திசையை மாற்றுவதற்காக மின்னணு இண்டர்லாக்கிங் முறை பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, விபத்தில் சிக்கிய ரயில்கள் அதிவேகமாக இயக்கப்படவிலலை என ரயில்வே போர்டு உறுப்பினர் ஜெய வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார்.