நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாடு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு முறையான கல்வி அளிப்பது குறித்த மாநாடு நடக்கிறது. நவீன சூழலுக்கு தேவையான கல்வி அளிப்பது தொடர்பான மாநாடு நடந்து வருகிறது.
"கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்"
தொழில் புரட்சி ஏற்பட்டபோது வேலை ஆட்களின் தேவை அதிகரித்து காணப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தது. இதனால் கணினி தேவை அதிகரித்தது. இதனால் கணினி கல்வி கற்க அவசியம் ஏற்ப்பட்டுள்ளது. தொலை தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு படையெடுத்தது.
கால மாற்றத்துக்கு ஏற்ப கல்வியிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு விவசாயம் மற்றும் தொழில் துறைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாணவர்களை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மெருகேற்ற வேண்டும். தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கியது. இன்றைய கால கட்டத்தித்தில் இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாலிடெக்னிக், ஐடிஐ., மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைகிறது.
"ஆங்கில மோகம் அதிகரித்துள்ளது"
இதனால் குறைந்த ஊதியத்தில் பொறியியல் மாணவர்கள் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு காலத்துக்கு ஏற்ற கல்வி கிடைக்காததால் அவர்கள் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் கல்வியில் மாற்றம் அவசியம்.
தேசிய கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோனருக்கு ஆங்கில திறன் குறைபாடு உள்ளது. பள்ளி பாட அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். இந்த பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சீனா மற்றும் ஜப்பானில் தாய் மொழியில் தான் படிக்கிறார்கள். இளைஞர்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ளதால் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்" என்றார்.
மறைமுக விமர்சனம்:
தொடர்ந்து பேசிய ஆளுநர், "நம் மாநிலத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் சூழலை உருவாக்க வேண்டும். முதலீட்டாளர்களை சென்று சந்திப்பதாலோ அல்லது பேசுவதாலோ மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிட மாட்டார்கள்" என்றார்.
சமீபத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக சென்ற நிலையில், ஆளுநர் இப்படி பேசியிருப்பது அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.