ஒடிஷா ரயில் விபத்து: 


கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தன இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.


இதுவரை இந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் இயந்திரங்கள் மூலம் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த நூற்றாண்டில் நடந்த ரயில் விபத்துகளில் இதுவே மிக மோசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை நடந்த மோசமான ரயில் விபத்துகள்:



  • 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம், பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டு ஆற்றில் விழுந்ததில் சுமார் 800 பேர் உயிரிழந்தனர்.

  • 1988 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தென்னிந்தியாவில் ரயில் தடம் புரண்டு அருகில் இருக்கும் குயிலான் ஏரியில் விழுந்ததில் 106 பயணிகள் உயிரிழந்தனர்.

  • 1995 ஆம் ஆண்டு இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 350 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தலைநகர் டெல்லியிலிருந்து 200 கி.மீ தொலைவில் நடைபெற்றது.

  • 1999 ஆம் ஆண்டு கொல்கத்தா அருகே இரண்டு ரயில்கள் மோதியதில் 285 பேர் உயிரிழந்தனர்.

  • 2005 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம் வேலுகோண்ட பகுதியில் பயணிகள் ரயிலில், பல பெட்டிகள் தடம் புரண்டதில் 77 பேர் உயிரிழந்தனர்.

  • 2011 ஆம் ஆண்டு ஃபதேபூர் அருகே விரைவு ரயில் தடம் புரண்டதில் 70 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 300 பேர் காயமடைந்தனர்.

  • 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்திர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டதில் 146 பயணிகள் உயிரிழந்தனர், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

  • 2017 ஜனவரி மாதம் ஆந்திர மாநிலத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டத்தில் பல பெட்டிகள் சிதைந்தது. இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமிர்தசரஸில் மக்கள் திருவிழா கொண்டாட்டத்தின்போது அந்த வழியாக சென்ற ரயில் மோதியதில் 59 பேர் உயிரிழந்தனர். மேலும் 57 பேர் காயமடைந்தனர்.