ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) மாலை பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. ithu ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்திற்கு அருகே யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.


இந்த ஹவுரா அதிவிரைவு ரயிலின் 3  பெட்டிகள் தடம் புரண்டதாகவும், அதே வழித்தடத்தில் வந்த  சரக்கு ரயில் ஒன்று  மோதியதில் மிகப்பெரிய விபத்தாக உருவெடுத்தது. இந்தநிலையில், காலை 11 மணி நேரப்படி, இந்த விபத்தில் குறைந்தபட்சமாக 238 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 900 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. 


புதிய தகவல்கள்: 


ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிய கோர விபத்தில் கோரமண்டலம் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் சிதைந்து உருக்குலைந்தது. உருக்குலைந்த பெட்டிகளில் சிக்கியுள்ளவர்வர்களை மீட்கும் பணி கடந்த 15 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த நிலையில், தற்போது முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 


தூக்கி வீசப்பட்ட 50 பேர்:


கோரமண்டலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 50 பேர் ஜன்னல் வழியாக தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்தனர். ஜன்னல், கதவுகள் வழியே தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்த சிலர் மீது ரயில் பெட்டிகள் விழுந்ததால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உருக்குலைந்த ரயில் பெட்டியின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி சவாலாக இருந்தது. விபத்தில் சிக்கிய 17 ரயில் பெட்டிகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 9 குழுக்கள், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று என்.டி.ஆர்.எஃப் ஐஜி நரேந்திர சிங் தெரிவித்தார். 


அவசர உதவி தொலைபேசி எண்: 


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 044- 25330952, 044- 25330953, 044- 25354771, 044- 25354146 என்ற எண்கள் மூலம் தொடர்பு கொண்டு விபத்து குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட ரயில்களில் பயணித்த அறிந்து கொள்ளலாம். இதேபோல் சென்னை எழிலகத்தில் ரயிலில் பயணித்த பயணிகளின் குடும்பத்தினருக்கு உதவ மாநில சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.1070, 044 - 28593990, 9445869848, 9445869843  ஆகிய எண்கள் வழியாகவும் பயணிகளின் தகவலை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. 


மேலும் காட்பாடியில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு அறைக்கு 9498651927, ஜோலார்பேட்டை அவசர கட்டுப்பாட்டு அறை 7708061811 ஆகிய எண்கள் மூலம் தகவல் பெறலாம்.