Odisha Muslim MLA: ஒடிசாவின் 87 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, இஸ்லாமிய பெண் ஒருவர் எம்.எல்.ஏ., ஆக வெற்றி பெற்றுள்ளார்.


ஒடிசாவின் முதல் இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏ.,


அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன், ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. அதில் யாரும் எதிர்பாராத விதமாக, 24 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் தோல்வியை தழுவியது. முதல்முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே பலரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டாக் தொகுதியில் போட்டியிட்ட, 32 வயதான சோபியா ஃபிர்தௌஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இதன் மூலம், 87 ஆண்டு கால ஒடிசா சட்டமன்ற வரலாற்றில், அம்மாநிலத்தில் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏ., என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.


சோபியா ஃபிர்தௌஸ் அரசியல் பின்னணி..!


கட்டாக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரபல பேறுகால மருத்துவ நிபுணரான பூர்ண சந்திர மகாபத்திராவை (69), 8001 வாக்குகள் வித்தியாசத்தில் சோபியா வீழ்த்தியுள்ளார். கடந்த 1937ம் ஆண்டு முதல் 141 பெண்கள், ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் யாருமே இஸ்லாமியர்கள் கிடையாது. பாராபதி - கட்டக்கின் முன்னாள் எம்.எல்.ஏவான முகமது மொகிமின் மகளான, சோபியா ஃபிர்தௌஸ் தான் மாநிலத்தின் முதல் இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏவாக தேர்வாகியுள்ளார். 2014 மற்றும் 2019 சட்டமன்றத் தேர்தல்களில் தனது தந்தைக்காக கட்சி ஊழியராக பணியாற்றினார். அப்போது, தேர்தல் பரப்புரை மற்றும் நிர்வாகக் கலையை தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டதாக சோபியா தெரிவித்துள்ளார்.


யார் இந்த சோபியா ஃபிர்தௌஸ்?


3.64 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுடன், சோபியா ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராகவும், இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் (கிரெடாய்) புவனேஸ்வர் பிரிவின் தலைவராகவும் உள்ளார். கிரெடாய் பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். கேஐஐடி பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங்கில் பிடெக் முடித்த பிறகு, 24 வயதில் அவர் ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்து வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார்.






30 நாட்களில் எம்.எல்.ஏ., பதவி:


கட்டாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற, முகமது மொகிம் இந்த முறையும் தேர்தலில்  போட்டியிடத் தயாராகி வந்தார். இருப்பினும், மாநில சட்டமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஒரிசா கிராமப்புற வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (ORHDC) கடன் மோசடி வழக்கில் அவரது தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவானது. இதையடுத்து தேர்தலுக்கு 30 நாட்களே எஞ்சியிருந்த நிலையில்,  அவரது மகளான சோபியாவை காங்கிரஸ் களமிறக்கியதோடு வெற்றியும் கண்டுள்ளது. 


சோபியா பெருமிதம்..!


சட்டமன்ற தேர்தல் வெற்றி தொடர்பாக பேசிய சோபியா, “இஸ்லாமிய பெண்ணாக நான் சரித்திரம் படைத்துள்ளேன். ஆனால், சட்டசபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஈர்க்கும் வகையில் இல்லை. 147 எம்.எல்.ஏ.க்களில், இந்த முறை 11 பேர் மட்டுமே பெண் எம்.எல்.ஏக்கள் ஆவர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.