அம்மா வந்தாள், அப்பா சென்றார்.. இப்படித்தானே காலம்காலமாகவே படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். அது ஏன் அம்மா வந்தாள்? அப்பா சென்றான் இல்லையா? இருபாலினரையும் அம்மா வந்தார், அப்பா சென்றார் என்று கூறலாமே… இதுகுறித்து என்றாவது யோசித்திருக்கிறோமா?


குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களை, கதை, பாடல் நூல்களை எடுத்துப் பாருங்களேன். பெரும்பாலும் இல்லையில்லை.. எப்போதும் அம்மாக்கள் சமைப்பார்கள். வீட்டு வேலை செய்வார்கள். அப்பாக்களும் தாத்தாக்களும் டிவி பார்ப்பார்கள், செய்தித்தாள் படிப்பார்கள். இல்லையெனில் வெளிவேலை எதாவது செய்து கொண்டிருப்பார்கள்.


காலம்காலமாக இப்படித்தான் நம்மை அறியாமலேயே நாம் கற்பிக்கப்படுகிறோம். அம்மா என்றால் வீட்டு வேலை செய்வாள் மன்னிக்கவும் செய்வார் என்று. இந்தக் கற்பிதங்களை எல்லாம் உடைத்து பாலின சமத்துவப் பாட நூல்களை அறிமுகம் செய்துள்ளது கேரள அரசு. வேலை எல்லோருக்கும் பொது. அதில் என்ன பாலின பேதம்? என்று மாற்றி யோசித்துள்ளது கேரளா.


தேங்காய் துருவும் தந்தை


பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. கேரள மாநிலத்தில் புதிதாக அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதில், மலையாள வழிக் கல்வியில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட நூல் அச்சடிக்கப்பட்டு இருந்தது. அதில் தந்தை தரையில் இருந்து தேங்காய் துருவிக் கொண்டிருக்கிறார். தாய் சமைத்துக் கொண்டிருக்கிறார். அக்கா சமையல் பொருளை அடுக்கி வைத்துக்கொண்டிருக்க, தம்பி விளையாடிக் கொண்டிருக்கிறார்.


பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓவியம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.




சமைக்கும் தந்தை


மாநிலப் பொதுக் கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி, இதுதொடர்பான புகைப்படத்தைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதேபோல ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் தனது மகளுக்காகத் தந்தை ஒருவர் சிற்றுண்டி செய்யும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.


நீங்கள் ஏன் வீட்டில் செய்வதில்லை?


இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய விதுரா என்னும் மாணவி, புதிய புத்தத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்பா ஒருவர் சமையல் அறையில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த புகைப்படத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். அதை என்னுடைய அப்பாவிடம் காட்டி ஏன் இதுபோல நீங்கள் வீட்டில் செய்வதில்லை என்று கேட்டேன் என தெரிவித்துள்ளார்.


பாலின சமத்துவம் குறித்துப் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் கேரள அரசின் முயற்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.