18வது மக்களவை தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரானார். நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் குடியரடு தலைவர் திரௌபதி முர்மு.
பிரதமர் மோடியை தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் மூன்றாவது முறையாக மோடி ஆட்சியில் கேபினட் அமைச்சராக பதவியேற்றார். அமைச்சர்கள் பட்டியலில் ஜே.பி.நட்டாவின் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், பாஜக தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
’ஒரு நபர், ஒரு பதவி’ என்பது பாஜகவின் கொள்கை:
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அமித் ஷாவிற்கு பதிலாக ஜேபி நட்டா பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்றார். இந்தநிலையில், பாஜக தலைவராக இருக்கும் நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. ஒரு நபர், ஒரு பதவி’ என்ற பாஜகவின் கொள்கையின்படி, ஜேபி நட்டா அமைச்சராக பதவியேற்று கொண்டால், பாஜக தேசிய தலைவராக விரைவில் வேறொரு நபர் நியமிக்கப்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜேபி நட்டாவுக்கு பதிலாக பாஜகவின் அடுத்த தலைவர் யார் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
அமித் ஷா தலைமையில் அமோக வெற்றி:
பாஜக தலைவராக அமித் ஷா இருந்தபோது, 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், 2024 மக்களவைத் தேர்தலில் ஜேபி நட்டா தலைமையில் பாஜக போட்டியிட்டது. ஆனால், இந்தமுறை பாஜக 441 இடங்களில் போட்டியிட்டு 240 இடங்களில் மட்டுமே தனித்து வெற்றிபெற்றது. இதனால் மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவினரால் 272 என்ற தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஜேடியுவின் உதவியுடன் பாஜக மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மோடி அரசில் சுகாதாரத்துறை அமைச்சர்:
2014 முதல் 2019 வரை பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக ஜேபி நட்டா பதவி வகித்தார். 2020 இல், அவர் மத்திய உள்துறை அமைச்சரும் கட்சியின் தலைமை ஆலோசனையாளருமான அமித் ஷாவுக்குப் பதிலாக பாஜகவின் தலைவராகப் பொறுப்பேற்றார். செப்டம்பர் 2022 இல் கட்சியின் தலைவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே, நட்டாவுக்கு 2024 மக்களவைத் தேர்தல் வரை நீட்டிக்கப்பட்டது.
அடுத்த பாஜக தலைவர் யார்..?
பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, சிவராஜ் சிங் சவுகான், ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ் போன்ற தலைவர்களின் பெயர்கள் விவாதிக்கப்பட்டன. ஆனால் இந்த தலைவர்கள் அனைவருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. இதனால், இவர்களில் யாராலும் பாஜக தலைவராக ஆக முடியாது.
இதையடுத்து, இந்த பதவிக்கு இரண்டு பெயர்கள் ஊகிக்கப்படுகின்றன. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்கள் வினோத் தாவ்டே மற்றும் சுனில் பன்சால். மகாராஷ்டிராவைச் சேர்ந்த வினோத் தாவ்டே தேசிய அரசியலில் நுழைவதற்கு முன்பு மாநில அரசில் அமைச்சராக இருந்தவர். தற்போது பீகார் மாநிலத்தின் பொறுப்பாளராக உள்ள அவர், மக்களவை தேர்தலின் போது பல முக்கிய பொறுப்புகளை கையாண்டுள்ளார்.
சுனில் பன்சால்:
உ.பி.யின் பொறுப்பாளராக சுனில் பன்சால் இருந்தபோது, அவரது பணி குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது. உ.பி.,க்கு பின், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா மாநிலங்களின் பொறுப்பாளராக பன்சால் நியமிக்கப்பட்டார். பன்சால் பாஜக தலைமையின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார், மேலும் கட்சி விவகாரங்களை கவனமாக கையாளும் திறமையும் பெற்றவர். இதனால் அடுத்த பாஜக தலைவராக இவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
வினோத் தாவ்டே:
மகாராஷ்டிராவைச் சேர்ந்த வினோத் தாவ்டே தேசிய அரசியலில் நுழைவதற்கு முன்பு மாநில அரசில் அமைச்சராக இருந்தவர். தற்போது பீகார் மாநிலத்தின் பொறுப்பாளராக உள்ள அவர், லோக்சபா தேர்தலின் போது பல முக்கிய பொறுப்புகளை கையாண்டுள்ளார்.
இதுபோக, முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்கூர் பெயர் பாஜக அடுத்த தலைவர் பதவிக்கு விவாதிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு இந்தமுறை மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.