ஒடிசா சுகாதார அமைச்சர் நபா தாஸ் மீது துனை காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரின் பிஜூ ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நபா தாஸ்  மாநில சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். 


இவர் இன்றைய தினம் ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ்நகரின் அருகே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றார். 


நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்ற நிலையில், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை காவல் உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் அமைச்சர் நபா தாஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். 


இதில் மார்பில் குண்டு பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஜார்சுகுடா விமான நிலையத்திற்கு நபா தாஸ் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து  விமான ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 


துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பிஜேடி கட்சியினர் தர்ணா நடத்தியதால் அந்த இடத்தில் பதற்றம் நிலவி வருகிறது. உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ்  ஏன் துப்பாக்கியால் சுட்டார் என்பது தெரியவில்லை. அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதற்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாய்க் கண்டனம் தெரிவித்துள்ளார். "அமைச்சர் ஸ்ரீ நாபா தாஸ் மீதான துரதிர்ஷ்டவசமான தாக்குதலால் நான் அதிர்ச்சியடைந்தேன். அவர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். 


 






இந்த வழக்கை விசாரிக்க குற்றப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்" என முதலமைச்சர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தனியார் மருத்துவமனையில் அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு சென்ற முதலமைச்சர் நவீன் பட்நாய்க், அமைச்சரின் மகனிடம் அவரது உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார். மாநில அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஒடிசா மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.