ஒடிசா சுகாதார அமைச்சர் நபா தாஸ் மீது உதவி காவல் ஆய்வாளர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரின் பிஜூ ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நபா தாஸ்  மாநில சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். இவர் இன்றைய தினம் ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ்நகரின் அருகே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றார். 


நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்ற நிலையில், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் அமைச்சர் நபா தாஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் மார்பில் குண்டு பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஜார்சுகுடா விமான நிலையத்திற்கு நபா தாஸ் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து  விமான ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 






துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பிஜேடி கட்சியினர் தர்ணா நடத்தியதால் அந்த இடத்தில் பதற்றம் நிலவி வருகிறது. உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ்  ஏன் துப்பாக்கியால் சுட்டார் என்பது தெரியவில்லை. அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.