உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து கொல்கத்தா செல்லவிருந்த ஏர் ஏசியா விமானம் லக்னோ விமான நிலையத்தில் இன்று அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்படுகையில் பறவை ஒன்று அதன் மீது மோதியதன் விளைவாக விமானம் தரையிறக்கப்பட்டது.


தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


விமானம் தரையிறக்கப்பட்டது குறித்து ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "லக்னோவில் இருந்து கொல்கத்தாவிற்கு இயக்க திட்டமிடப்பட்ட விமானத்தில் i5-319 பறவை மோதியது. இதன் விளைவாக, விமானம் விமான நிலையத்திற்கே திரும்பியது. விரிவான ஆய்வுக்காக தரையிறக்கப்பட்டது" என்றார்.


சமீப காலமாக, விமானத்தில் பல்வேறு சர்ச்சைகள் அரங்கேறி வருகிறது. பயணிகளின் மோசமான நடத்தை முதல் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வரை விமானம் தொடர்பான செய்திகள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


இந்த மாத தொடக்கத்தில், பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


மோசமான வானிலை காரணமாக விமானங்கள் திருப்பிவிடப்படுவது, விமானம் மீது பறவை மோதும் சம்பவங்கள் வழக்கமாக நடைபெறும் ஒன்றாக இருந்தபோதிலும் பயணிகள் மோசமாக நடந்து கொள்ளும் விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


சமீபத்தில், விமானப் பணிப் பெண்ணிடம் வெளிநாட்டு பயணி  அத்துமீறிய இரண்டு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல, நவம்பர் மாதம், ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.


மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த நபர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.


கடந்த டிசம்பர் மாதம், பாரிஸிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் இருக்கையில் சிறுநீர் கழித்தது, கழிவறைக்குள் புகை பிடித்தது உள்ளிட்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தங்களிடம் புகார் தெரிவிக்கத் தவறியதற்காக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. 


 






கடந்த ஒரு வார காலத்தில், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட இரண்டாவது அபராதம் இதுவாகும்.