இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டிலே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியிலும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.


குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் பல்வேறு பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒடிசா மாநிலத்திலும் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. அந்த மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று மட்டும் 3 ஆயிரத்தை நெருங்கியது.




இதனால், அந்த மாநில தலைநகரான புவனேஸ்வரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அந்த நகரத்தில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும். அத்தியாவசிய தேவைகள் தவிர பிற பணிகளுக்கு இந்த நேரத்தில் தடை விதிக்கப்படுகிறது.


இதுதவிர, சத்தீஸ்கர் எல்லையில் உள்ள சுந்தர்கார், ஜார்சுக்டா, சம்பல்பூர், பர்கார், நௌபடா, கலகண்டி, போலாங்கிர், நாபர்ங்பூர், கோரபுட் மற்றும் மல்கன்கிரி ஆகிய மாவட்டங்களில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.