ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்னாயக் தலைமையிலான அரசு கடந்த மே 29ஆம் தேதி மூன்றாவது ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தது. இதைத் தொடர்ந்து அங்கு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்ற தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் ஒடிசாவிலுள்ள அனைத்து அமைச்சர்களும் மொத்தமாக இன்று ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும் நாளை நண்பகல் 12 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர ஒடிசா சட்டப்பேரவையின் சபாநாயகர் நாராயண் பட்ரோவும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் ராஜானி காந்த் சிங் இடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போது மீண்டும் நவீன் பட்னாயக் 5வது முறையாக ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார். வரும் 2024ஆம் ஆண்டு ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் அதற்கு முன்பாக சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே நேற்று வெளியான இடைத்தேர்தலில் பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த அலாகா மொஹந்தி சிறப்பான வெற்றியை பெற்று இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் ஒடிசாவின் ப்ரஜராஜ்நகர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த கிஷோர் மொஹந்தி மாரடைப்பால் உயிரிழந்தார். அந்த தொகுதிக்கான இடைத் தேர்தலில் அவருடைய மனைவி அலாகா மொஹந்தி போட்டியிட்டு சிறப்பான வெற்றியை பெற்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்