யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் அனைத்து தேர்வர்களுக்கும் இவரின் கதை நிச்சயம் உத்வேகம் அளிக்கும். யார் அவர், அப்படி இவர் என்ன செய்துவிட்டார்?


ஊழலைக் கண்டுபிடித்ததற்காக மர்ம நபர்களால் 7 முறை சுடப்பட்டு உயிர் பிழைத்த உத்தரப் பிரதேச அரசு ஊழியர், ஒருவர் யூபிஎஸ்சி தேர்வில் தனக்கான கடைசி வாய்ப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.


உத்தரப்பிரதேச மாநில அரசு ஊழியர் (PCS) ரிங்க்கு சிங் ரஹீ. 2007 பேட்ச் அதிகாரியான இவர், முசாஃபர் நகரில் தன்னுடைய பணிக்காலத்தில் உதவித்தொகையில் நடைபெற்ற ஊழலைக் கண்டுபிடித்தார். ரூ.83 கோடி ஊழலை வெளிப்படுத்தியதற்காக அவர் 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 7 முறை சுடப்பட்டார். 


3 புல்லட்டுகள் அவரின் முகத்தில் பாய்ந்தன. ஒரு கண் பார்வையை இழந்தார் ரஹீ. முகம் கோணலாக மாறியது. ஒரு காதின் கேட்கும் திறன் முழுமையாகப் போனது. இந்த சம்பவத்தில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 4 பேருக்குப் பத்து ஆண்டுகள் ஆயுள் தண்டனை கிடைத்தது.


ஆனாலும் அவருக்கு எதிரான போராட்டம் முடியவில்லை. மனநல மருத்துவ மையத்துக்கு ரஹீ அனுப்பப்பட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''மிகவும் சோதனையான காலகட்டம் அது. சிஸ்டத்துக்கு எதிராக நான் போராடவில்லை. சிஸ்டம்தான் என்னை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது. 4 மாதங்கள் நான் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றேன். ஆனால் இன்றுவரை என்னுடைய மருத்துவ விடுப்பு நிலுவையில்தான் இருக்கிறது'' என்றார்.


எனினும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று நம்பிய அவரின் நம்பிக்கையும் உறுதியும், நடந்த எதையும் விதி என்று கடந்துபோக விடவில்லை. தொடர் சிகிச்சைக்குப் பிறகு, யூபிஎஸ்சி தேர்வர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார் ரஹீ. 




மாணவர்களுக்கு பல ஆண்டுகளாகக் கற்பித்து வந்தவரிடம், யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகுமாறு மாணவர்கள் வலியுறுத்தினர். ஆனால் 40 வயதான அவருக்கு இதுதான் கடைசி வாய்ப்பாக இருந்தது. கடினமாக உழைத்த ரஹீ, அகில இந்திய அளவில் 683ஆவது இடத்தைப் பிடித்து யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.  


இதுகுறித்துக் கூறிய அவர், ''என்னைப் பொறுத்தவரை பொதுநலமே முக்கியம். எப்போதாவது சுய நலத்துக்கும் பொது நலத்துக்கும் இடையே முரண் ஏற்பட்டால், நான் பொது நலத்தையே தேர்ந்தெடுப்பேன். 


இப்போது நிறைய மாறிவிட்டேன். ஏதாவது தவறைக் கண்டுபிடித்தால், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன். ஏனெனில் என்னுடைய இறப்பு, ஊழலுக்கான முற்றுப்புள்ளியாக மாறிவிடக் கூடாது. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, களையப்பட வேண்டும்'' என்கிறார் தன்னம்பிக்கையும் நேர்மையும் நிறைந்த அதிசய மனிதர் ரிங்க்கு சிங் ரஹீ.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண