அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எங்களுக்கு தான் சாதகமாக உள்ளது என, ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
வைத்திலிங்கம் விளக்கம்:
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுக்குழு கூட்டியது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சொன்னதை போலவே உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொதுக்குழு செல்லும் என கூறினாலும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கருத்து கூறவில்லை. அதேநேரம், சிவில் நீதிமன்றத்தில் இருக்க கூடிய வழக்கு எங்கள் கருத்தை கட்டுப்படுத்தாது என கூறியுள்ளனர்.
நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து சேலஞ்ச் செய்வோம். இதனால் எங்களுக்கு பெரிய பாதிப்பு கிடையாது. முழு தீர்ப்பை பார்த்த பிறகு எங்களது நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும். மேல் முறையீடும் செய்வோம். சிவில் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு, எங்களது கருத்தை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பதால் இது எங்களுக்கு சாதகமான தீர்ப்பு” தான் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு என்ன?
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அத்தனை மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் அமர்வு முன்னதாக அளிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். இந்த தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கியும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான், உச்சநீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வந்துள்ளதாக, வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.