இந்திய ரயில்வே செப்டம்பர் மாதம் வரை கழிவுப் பொருட்கள் விற்பனை மூலம் ரூ.2500 கோடிக்கு மேல்  வருமானம் ஈட்டியுள்ளது.


இந்திய ரயில்வே ஆண்டு தோறும் இரும்புக் கழிவுகளை ஏலம் விட்டு கணிசமான அளவு வருமானம் ஈட்டுவது வழக்கம். அந்த வகையில் சென்ற மாதம் வரை 2500 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளது.


பயன்படுத்த முடியாத இரும்புக் கழிவு ஏலம்


இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2022-23ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கழிவுப் பொருட்கள் விற்பனையில் இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.


 






இந்த விற்பனையின் மூலம் செப்டம்பர் வரை இந்திய ரயில்வே ரூ.2500 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. 2021-22ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.2300 கோடியுடன் ஒப்பிடும்போது இது 28.91 விழுக்காடு அதிகமாகும்.


2021-22இல் 3,60,732 மெட்ரின் டன் இரும்பு கழிவுப் பொருள்கள் அகற்றப்பட்ட நிலையில், 2022-23இல், 3,93,421 மெட்ரின் டன் இரும்பு கழிவுப் பொருள்கள் அகற்றப்பட்டன.


கழிவுப்பொருட்களை சேர்த்து மின்-ஏலம் மூலம் விற்பனை செய்வதன் வாயிலாக வளங்களை சிறப்பாக பயன்படுத்தும் முயற்சியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.


6 மாதங்களில் 2500 கோடி வருமானம்


பயன்படுத்த முடியாத இரும்புக் கழிவுகளை விற்பனை செய்வது என்பது இந்திய ரயில்வேயின் ஒரு தொடர் நடவடிக்கையாகும்.


 






இந்த செயல்முறை மண்டல ரயில்வே மற்றும் ரயில்வே வாரியம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 


பொதுவாக ரயில்பாதை கட்டுமானப் பணிகளில் இரும்புக் கழிவுகள் உருவாகின்றன. ரயில் தண்டவாளங்களுக்கு இடையேவுள்ள மீண்டும் பயன்படுத்தப்படாத வார்ப்பட இரும்பு ஸ்லீப்பர்கள் ரயில்வே விதிகளின்படி அகற்றப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின் ஏலம்


ரயில்வேத் துறையில் ஏற்படும் இரும்புக் கழிவுகளை மின்னணு முறையில் ஏலம் விடும் முறை 2013ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. 


ஆண்டுதோறும் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான இரும்புக் கழிவுகள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. www.ireps.gov.in என்ற இணையதளம் மூலம் இந்த ஏலம் நடைபெறுகிறது.