ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மற்றும் தவுசா மாவட்டத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் 3-வது அலையின் பாதிப்பு தொடங்கிவிட்டதோ? என்ற பீதியில்  மக்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவலை எதிர்த்து இந்தியா முழுவதும் தீவிர சுகாதார போராட்டம் நடைபெற்றுவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதோடு மட்டுமின்றி ஒரே நாளில் 4 ஆயிரத்து 454 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த பாதிப்பினை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும் மக்களிடையே கொரோனா பற்றிய அச்ச உணர்வு இல்லாத காரணத்தினால்  தான் நாடு முழுவதும் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசு ஒருபுறம் குற்றம்சாட்டி வருகின்றது. குறிப்பாக கொரொனா தொற்றின் முதல் அலையினை விட இரண்டாவது அலையின் பாதிப்பு கிராமப்புற பகுதிகளிலும் தீயாய் பரவிவருகிறது.




இந்த நிலையில் தான் மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகள் பெரும்பாலும் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களில் ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில்  325 குழந்தைகளுக்கு  கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து  தவுசா மாவட்டத்திலும் சுமார் 300 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தற்போது குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதால் மூன்றாவது அலையின் தாக்கம் தொடங்கிவிட்டதோ? என்ற அச்சம் மக்களிடையே அதிகளவில் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குழந்தைகள் நல அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம், நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3-வது அலை அதிகளவில் பாதிப்பினை ஏற்படுத்துவதோடு குழந்தைகளையும் அதிகளவில் தாக்கும் என எச்சரித்துள்ளது. எனவே குழந்தைளை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான மருத்துவ வசதிகளை அதிகரிக்கவேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளை குழந்தைகள் நல ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.




இந்த பதற்றமான சூழலில்தான், பாரத் பயோடெக் அதன் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை குழந்தைகளுக்கு செலுத்தி மெற்கொள்ளும் பரிசோதனையை ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பரிசோதனையை அடுத்து தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுவரும் நிலையில், குழந்தைகளை இதிலிருந்து பாதுகாக்கலாம் என்ற நம்பிக்கை  ஓரளவுக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.