இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள முக்கிய  திட்டங்கள் குறித்து பார்க்கலாம்

1.பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ்  ( Beti Bachao Beti Padhao)

குறைந்த பாலின பாகுபாடு குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த திட்டம். பெண் குழந்தைகளுக்கான கல்வியை ஊக்கப்படுத்தவும், கருக்கலைப்பு போன்ற சம்பவங்களை தடுக்கவேண்டும் என்பதே பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ் திட்டத்தின் முக்கிய நோக்கம். பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டில்லி போன்ற குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

2. சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana)

இந்த திட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களின் எதிர்காலத்தை காக்கும் விதமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கினை தொடங்க இது வழி வகுக்கிறது. 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் வரையிலான  வைப்பு நிதியை செலுத்தலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் அல்லது அந்த பெண் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனாலும் சேமிப்பு பணத்தினை பெற்றுக்கொள்ளலாம். 7.6 சதவிகித வட்டி விகிதத்தை வழங்குகிறது.



3.பாலிகா சம்ரிதி யோஜனா (Balika Samriddhi Yojana )

இது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள இளம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது.பள்ளிப்படிப்பில் பெண்களை ஈடுபடுத்துவது, குழந்தை திருமணத்தை தடுத்து திருமண வயதை நிர்ணயிப்பது போன்றவையே இந்த திட்டத்தின் குறிக்கோள். பெண்குழந்தை பிறந்த பிறகு 500 ரூபாயும், அதன் பிறகு 10-ஆம் வகுப்பு கல்வியினை படிக்கும் வரையில் ஆன்டுக்கு 300 முதல் 1000 ரூபாய் வரையிலான நிதியினை இத்திட்டம் வழங்குகிறது. 18 வயதிற்கு பிறகு திருமண அல்லது கல்வி உதவித்தொகையினையும் இதன் மூலம் பெற முடியும்.

4.சிபிஎஸ்இ உதான் திட்டம் (CBSE Udaan Scheme)

இந்த திட்டம் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மேற்பார்வையில் , மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சிபிஎஸ்இ உதான் திட்டம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் பெண்களின் நிலையை உயர்த்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. இந்த திட்டம் சில குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். பொருளாதாரத்தின் பின் தங்கிய பெண்களை ஊக்குவிக்கவே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு , அவர்களுக்கான கல்விச்சலுகைகளையும் வழங்கி வருகிறது. பிறந்த நாடு , ஆண்டு வருமான கணக்கு, சி.பி.எஸ்யில்  படிக்கும் மாணவர்களின் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில்  கணக்கு, அறிவியல், வேதியியல் பாடப்பிரிவு எடுத்தவர்கள் என சில நிபந்தைனைகளை கொண்டுள்ளது



5. இடைநிலைக் கல்வியில் சிறுமிகளுக்கான தேசிய ஊக்கத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education)

பின்தங்கிய வகுப்பினை சார்ந்த சிறுமிகளுக்கான உதவித்தொகையை இந்த திட்டம் வழங்குகிறது. இதில் பெண் குழந்தையின் பெயரில் வைப்புநிதியாக 3 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், அந்த பெண்குழந்தை 10-ஆம் வகுப்பு முடித்தவுடன், 18 வயதில் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இது கட்டாய இடைநிலை கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 8-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெற்ற அனைத்து எஸ்சி/எஸ்டி பெண் குழந்தைகள் மற்றும்  பிற சமூக குழுக்களைச் சேர்ந்த மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  சிபிஎஸ், என்விஎஸ் மற்றும் கேவிஎஸ் போன்ற  மத்திய அரசு திட்டங்களுக்கு பதிவு செய்தவர்கள் மற்றும் திருமணமான பெண்கள் இந்த திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.