சமீபத்தில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துடனான நேர்காணலில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவர் நுபுர் ஷர்மா முகமது நபி குறித்து அவதூறாக பேசியது, இந்தியாவை அதன் யதார்த்தத்தில் இருந்து விலக்கி வேறு விதமாக வெளியில் சித்தரித்துள்ளது எனக் கூறியுள்ளார். 


பாஜக தலைவர் நுபுர் ஷர்மாவின் கருத்துகள் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததா எனக் கேட்கப்பட்ட போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், `ஆம்.. இந்தியா வேறுவிதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.. மேலும், இந்தியாவுக்கு எதிராகப் பரவியுள்ள பொய்யான பிரச்சாரங்களால் யதார்த்தத்தில் இருந்து விலகி, இந்தியா குறித்து எதிர்மறையாக சித்தரிக்கப்படுகிறது. நாம் அவர்களைத் தொடர்புகொண்டு, பேசி, இதுகுறித்து விளக்கம் தர வேண்டும். எங்கெல்லாம் நாம் சென்றிருக்கிறோமோ, அங்கெல்லாம் இது தொடர்புடைய மக்களைச் சந்தித்து பேசும்போது அவர்களை சமாதானப்படுத்தியிருக்கிறோம்.. சிலர் உணர்ச்சிவசப்படுவதால், அவர்களின் நடத்தைகளில் சற்றே பிரச்னைகள் ஏற்படுகின்றன’ எனக் கூறியுள்ளார். 


சமீபத்தில், செய்தி தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபி குறித்து அவதூறாக பேசியதால், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றதோடு, சர்வதேச அளவில் கண்டனங்களும் எழுந்தன. 



இந்தியாவுக்குள் எழுந்த கண்டனங்கள், நுபுர் ஷர்மா மீதான வழக்கு முதலானவற்றை முதலில் புறந்தள்ளினாலும், மேற்கு ஆசியாவின் பல்வேறு நாடுகள் இந்தியத் தூதர்களுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கோரிய பிறகு, பாஜக சார்பில் நுபுர் ஷர்மா இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, டெல்லி பாஜகவின் ஊடக அணித் தலைவர் நவீன் ஜிண்டால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். 


கடந்த ஜூன் 11 அன்று, மும்பை காவல்துறை சார்பாக, முகமது நபி குறித்து அவதூறாக பேசியதற்கான சம்மன் ஒன்று நுபுர் ஷர்மாவுக்கு அனுப்பப்பட்டது. மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் நுபுர் ஷர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மேலும், தனது நேர்காணலில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்துவாராவில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள் துரதிருஷ்டவசமானவை எனவும், அந்நாட்டில் வாழும் சிறுபான்மையினர் அனைவருக்கும் இந்தியா உதவ முன்வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 



கடந்த ஜூன் 18 அன்று, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்த குருத்துவாராவில் துப்பாக்கி ஏந்திய நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதோடு, இரட்டை குண்டுவெடிப்புகளும் ஏற்பட்டன. 


இதுகுறித்து பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , `பெருவாரியான எண்ணிக்கையில் சீக்கியர்களுக்கு நாம் விசா வழங்கியுள்ளோம்.. தற்போது விமான சேவை இருப்பதால், பலரும் நாடு திரும்ப வாய்ப்புள்ளது.. இந்த விவகாரத்தில் இந்தியா உறுதியாக அவர்களுடன் நிற்கும்’ எனக் கூறியுள்ளார்.