வேலை வாங்கி தருவதாக ஏமாற்றம்:


கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த தனியார் ஏஜென்சி ஒன்று அதிக சம்பளத்துக்கு ஆசை காட்டி பெண்களை அரபு தேசங்களுக்கு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. டெய்லரிங், நர்சிங் என பல வேலைகளுக்கு அழைத்துச் சென்று, அவர்களை வீட்டு வேலை செய்ய அடிமைகளாக விற்பனை செய்த கொடுமை இப்போது வெளியாகி வருகிறது. மேலும், சுமார் நூறு பெண்களை சிரியா கொண்டு சென்று ஐ.எஸ் அமைப்பினருக்கு விற்பனை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. கேரள போலீசும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.


முக்கிய குற்றவாளிகள்


இந்த விசாரணையில் கண்ணூரைச் சேர்ந்த மஜீத் மற்றும் பத்தணம்திட்டாவைச் சேர்ந்த அஜுமோன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது. மஜீத் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அஜுமோன் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். முன் ஜாமீன் கிடைக்காததால் எர்ணாகுளம் சவுத் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அஜுமோன் மீது ஆள் கடத்தல் பிரிவு ஐ.பி.சி 370-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தப்பி வந்த இளம் பெண் புகார்:


வெளிநாட்டில் இருந்து உயிர் தப்பி வந்த கொச்சியை சேர்ந்த இளம்பெண் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பராமரிக்கும் பணிக்கு மாதம் 60,000 சம்பளம், விமான டிக்கெட் இலவசம் என ஏமாற்றி இளம் பெண்களை குறிவைத்து வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். புகார் அளித்த இளம் பெண்ணை முதலில் துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து குவைத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குவைத்தில் மாமா என அழைக்கப்படும் பெண் ஒருவர் இந்த இளம் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.


என்.ஐ.ஏ விசாரணை :


கொச்சியை சேர்ந்த இளம் பெண்ணை குவைத்தில் கொண்டு சேர்த்ததற்காக மஜீத்துக்கு மூன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டதாக அந்த பெண் புகாரில் கூறியுள்ளார். மேலும் கொல்லத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும், திருக்காக்கரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதில் சிரியாவில் இருந்து தப்பித்து வந்த இளம் பெண்ணிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளது. இளம் பெண்களுக்கு அதிக சம்பளத்துக்கு ஆசைகாட்டி சிரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு ஐ.எஸ் அமைப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் குற்றவாகியான மஜீத்தை கைது செய்தால் ஐ.எஸ் அமைப்புடன் அவருக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண