தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, திரௌபதி முர்மு ஒடிஷா மாநிலத்தின் ராய்ரங்கப்பூரில் இருக்கும் சிவன் கோயிலை சுத்தம் செய்து கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், குடியரசுத் தலைவர் வேட்பாளr திரௌபதி முர்மு கோயிலுக்கு வெளியில் சுத்தம் செய்வது, அதன் சடங்குகளைப் பின்பற்றுவது முதலானவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து ஒடிஷாவில் `ஜாஹிரா’ என்றழைக்கப்படும் பழங்குடிகள் வழிபாட்டு இடத்திற்கும் திரௌபதி முர்மு சென்றுள்ளார். 


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில், பாஜக கடந்த ஜூன் 21 அன்று திரௌபதி முர்முவை வேட்பாளராக அறிவித்தது. மேலும், தற்போது திரௌபதி முர்முவுக்கு `Z' அடக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய சி.ஆர்.பி.எஃப் படையினர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 






திரௌபதி முர்முவைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக முன்மொழிந்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் சிறந்த குடியரசுத் தலைவராக செயல்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் ஜார்க்கண்ட் ஆளுநராகவும் திரௌபதி முர்மு பணியாற்றியதால் அவரால் கொள்கை விவரங்கள் பற்றிய அவரது புரிதலும், அவரது இரக்க குணமும் நாட்டுக்குப் பயனுள்ளதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, `தன் வாழ்க்கையை முழுவதுமாக சமூகத்திற்கு சேவை செய்வதையும், ஏழைகளையும், விளிம்புநிலை மனிதர்களையும் மேம்படுத்துவதற்காகவே செலவிட்டவர் திரௌபதி முர்மு. அவர் அதிகப்படியான நிர்வாக அனுபவமும், அதிகாரப் பதவிகளின் பொறுப்புகளிலும் இருந்து பழக்கப்பட்டவர். எனவே அவர் நம் நாட்டில் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார் என்பதில் நம்பிக்கை கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். 






மற்றொரு பதிவில் பிரதமர் மோடி, `லட்சக்கணக்கான மக்கள், அதிலும் குறிப்பாக வறுமையை எதிர்கொண்டவர்கள், கடினமான வாழ்க்கையைக் கொண்டோர், திரௌபதி முர்முவின் வாழ்க்கையில் இருந்து பலம் பெறலாம்.. கொள்கை விவகாரங்களில் அவரது புரிதல், அவரது இரக்க குணம் ஆகியவை நாட்டுக்கு நன்மை தரும்’ எனவும் கூறியுள்ளார். 


திரௌபதி முர்மு இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவர் எனவும், பிரதிபா பாட்டீலுக்குப் பிறகு, இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் எனவும் அழைக்கப்படுவார்.