இந்தியப் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான சென்ட்ரல் விஸ்டா கட்டுமானம் நடைபெற்று வரும் பகுதியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் ராஜபாதை (Rajpath)  பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.





சென்ட்ரல் விஸ்டா எனும் மத்திய வழித்தடப்பாதைத் திட்டம் புதுடெல்லியின் ராஜபாதைபகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி டெல்லி ஒருவாரகாலம் பொதுமுடக்கத்தில் இருந்தபோது கூட இந்தத் திட்டத்துக்கான பணியாளர்கள் தீவிரப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். டெல்லி வடக்கு மற்றும் தெற்கு பிளாக் கட்டடப் பகுதியிலிருந்து ராஜபாதையை உள்ளடக்கிய இந்தியா கேட் மற்றும் அதனையொட்டிய புல்வெளிகள், வாய்கால்கள், மரங்கள், விஜய் சவுக் மற்றும் இந்தியா கேட் பிளாசா வரை உள்ள 3 கி.மீ நீளப் பகுதி இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகிறது. தற்போது இந்த மேம்பாட்டு நடவடிக்கைகளைப் புகைப்படம் எடுப்பதற்குத்தான் தடைவிதிக்கப்பட்டுள்ளது.



சென்ட்ரல் விஸ்டா திட்டம்:  


20,000 கோடி மதிப்பில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டடம், மத்திய வழித்தடப்  பகுதி (Central Vista Avenue)  மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. வரும் நவம்பர் மாதம் சென்ட்ரல் விஸ்டா பணிகள் முழுமையடையும் எனக் கூறப்படுகிறது.