சம்பவம் நடைபெற்றபோது பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமான ஆடையை பாதிக்கப்பட்ட சிறுமி அணிந்திருந்ததால் அதை பாலியல் வன்கொடுமையாக கருத முகாந்திரம் இல்லை என கூறி, நீதிமன்றம் சமூக ஆர்வலர் சந்திரனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான சந்திரன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டது. புகார்தாரரான இளம் எழுத்தாளர், பிப்ரவரி 8, 2020 அன்று நந்தி கடற்கரையில் உள்ள முகாமில் சந்திரன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்திருந்தார்.
ஜாமீன் கோரிய மனுவுடன், 74 வயதான சந்திரன், புகார்தாரரின் புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தீர்ப்பை ஒத்திவைத்த கோழிக்கோடு அமர்வு நீதிமன்றம், "பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமான ஆடைகளை பாதிக்கப்பட்ட சிறுமி அணிந்திருந்ததால், இந்திய தண்டனைச் சட்டம் 354 ஏ பிரிவு இதற்கு பொருந்தாது" என தெரிவித்தது.
இதுகுறித்து விவரித்த நீதிமன்றம், "குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவுடன் சேர்ந்து சமர்பிக்கப்பட்டுள்ள புகைப்படங்களில், பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமான ஆடையை புகார்தாரரான சிறுமி அணிந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக 354 ஏ பிரிவை தொடுக்க முகாந்திரம் இல்லை" என குறிப்பிட்டது.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட 74 வயதான சந்திரன், மாற்று திறனாளியாக இருப்பதால் இன்னொரு நபரை எப்படி வற்புறுத்தி இருக்க முடியும் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்த நீதிமன்ற உத்தரவில், "உடல் ரீதியான தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டாலும், 74 வயதான மாற்று திறனாளி நபர், புகார்தாரரை வலுக்கட்டாயமாக மடியில் அமர வைத்தார் என்று நம்ப முடியாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 8, 2020 அன்று, நந்தி கடற்கரையில் சந்திரன் ஒரு முகாமைக் கூட்டியதாகவும் அங்கு யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக அவரது மடியில் படுக்கச் சொல்லி, தனது மார்பகங்களை அழுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி இந்திய தண்டனை சட்டம் 354A (2), 341 மற்றும் 354 ஆகிய பிரிவுகளின் கீழ் கோயிலாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது பொய்யான குற்றச்சாட்டு என்றும் குற்றம்சாட்டப்பட்டவரின் எதிரிகள் ஜோடித்த வழக்கு என்றும் சந்திரனின் வழக்கறிஞர் வாதம் முன்வைத்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்