விவசாய கடன் திட்டத்திற்கு 1.5 சதவிகிதம் வட்டி மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வட்டி மானிய திட்டத்தை மீண்டும் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாய வட்டி மானிய திட்டத்திற்கு 34,860 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று, வங்கிகள், சிறு நிதி வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் குறுகிய கால விவசாய கடன்களுக்கான வட்டி மானியத்தை 1.5 சதவீதமாக மீண்டும் உயர்த்தியுள்ளது.
2022-23 முதல் 2024-25 நிதியாண்டில் விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு வட்டி மானியத்தை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "2022-23 முதல் 2024-25 நிதியாண்டில், விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களை வழங்க கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு (பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கி, சிறு நிதி வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்) 1.5 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் 2022-23 முதல் 2024-25 வரையிலான காலக்கட்டத்தில் வட்டி மானியத்திற்கு கூடுதலாக 34,856 ரூபாய் கோடி பட்ஜெட் ஒதுக்கீடு தேவைப்படுகிறது. வட்டி மானியம் உயர்த்தப்பட்டிருப்பது விவசாயத் துறையில் கடன் ஓட்டத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதோடு, கடன் வழங்கும் நிறுவனங்களின் குறிப்பாக பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் நிதி வலிமை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்து, கிராமப்புற பொருளாதாரத்தில் போதுமான விவசாயக் கடனை உறுதி செய்யும்.
இத்திட்டத்தினால் அதிகரிக்கும் செலவை வங்கிகள் உள்வாங்கி கொள்ள முடியும். குறுகிய கால விவசாயத் தேவைகளுக்காக விவசாயிகளுக்கு கடன்களை வழங்க ஊக்குவிக்கப்படும். அதிக விவசாயிகள் விவசாயக் கடனின் பலனைப் பெற உதவும். கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, கோழி வளர்ப்பு, மீன்பிடி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் குறுகிய கால விவசாயக் கடன்கள் வழங்கப்படுவதால் இது வேலைவாய்ப்பை உருவாக்கும்.
விவசாயிகள் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் பட்சத்தில் ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் குறுகிய கால விவசாயக் கடனைப் பெறுவார்கள்.
மானிய வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கு குறுகிய காலக் கடன் வழங்குவதற்காக அரசு வட்டி மானியத் திட்டத்தை (ISS) அறிமுகப்படுத்தியது. விவசாயிகள் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை வங்கியில் செலுத்த வேண்டும் என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்