Nehru - Ambedkar: இந்திய அரசியலமைப்பு தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மீண்டும் கருத்து மோதல் வெடித்துள்ளது.


அரசியலமப்பால் வெடித்த சர்ச்சை:


நாட்டின் அரசியலமைப்பு தொடர்பாக, இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவு தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பதிவிட்ட சிறிது நேரத்திலேயே நீக்கப்பட்ட அந்த பதிவில், சுதீந்திர குல்கர்னி எழுதிய கட்டுரையின் இணைப்பு இருந்தது. அதில் அரசியலமைப்பு மற்றும் அதன் முன்னுரைக்கு  பெரும்பங்காற்றியவர்  நேரு தான். அம்பேத்கர் அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.


காங்கிரஸ் மீது பாஜக பாய்ச்சல்:


குல்கர்னியின் கருத்தை ஆமோதித்ததற்காக சாம் பிட்ரோடா மற்றும் காங்கிரஸை, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா கடுமையாக விமர்சித்துள்ளார். அதன்படி,  காங்கிரசில் அம்பேத்கர்-விரோத, தலித் எதிர்ப்பு டிஎன்ஏ உள்ளது. ராகுல் காந்தியின் மாமா சாம் பிட்ரோடா அரசியல் சாசனத்திற்கு அம்பேத்கரின் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார். இந்த வார்த்தைகள் சாம் பிட்ரோடாவுடையதாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னணியில் உள்ள உணர்ச்சியை சோனியா மற்றும் ராகுல் காந்தி கொடுத்துள்ளனர். நேருவின் ஆட்சிக் காலத்தில் அம்பேத்கரை இரண்டு முறை தேர்தலில் தோல்வியடையச் செய்ததும் இதே காங்கிரஸ்தான், அம்பேத்கரின் பாரத ரத்னாவைத் தாமதப்படுத்தியதும் இதே காங்கிரஸ்தான்” என்று பூனாவாலா சாடியுள்ளார்.






”என்னுடைய அரசியலமைப்பு அல்ல - அம்பேத்கர்”


கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும், அரசியலமைப்பு தொடர்பான தனது கருத்தில் நிலையாக இருப்பதாகவும், மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும், சுதீந்திர குல்கர்னி தெரிவித்துள்ளார். மேலும், “டாக்டர் அம்பேத்கர் இந்து சமுதாயத்தில் நீதி மற்றும் சமத்துவத்திற்காக போராடியதால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் பல சமூக சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாக இருந்தார். உண்மைகளின் அடிப்படையில், அரசியலமைப்பை உருவாக்குவதில் அம்பேத்கரை விட நேருவின் பங்களிப்பு அதிகம் என்று நான் ஒரு கட்டுரை எழுதினேன். வரலாற்றைப் படித்த அனைவரும் இதை ஏற்றுக்கொள்வார்கள். அரசியலமைப்பை எழுதும் பணியை காங்கிரஸ் தொடங்கியது. 1930-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி காங்கிரஸ் 'பூர்ண ஸ்வராஜ்' தீர்மானத்தை நிறைவேற்றியது. அன்றிலிருந்து நேரு  அரசியல் சட்டத்தை நோக்கி உழைத்தார். இது என்னுடைய அரசியல் அமைப்பு அல்ல என அம்பேத்கரே குறிப்பிட்டுள்ளார்.  ஒரு காலத்தில் நான் பாஜகவில் இருந்தேன். ஆனால், இப்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எனது வார்த்தைகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தவோ அல்லது தவறாக பயன்படுத்தவோ கூடாது" என்று சுதீந்திர குல்கர்னி விளக்கமளித்துள்ளார்.