Nitish Kumar: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக மீண்டும் பதவியேற்பார் என கூறப்படுகிறது.


கூட்டணி மாறும் நிதிஷ் குமார்:


பீகாரில் பாஜக உடன் சேர்ந்து ஆட்சி செய்து வந்த நிதிஷ்குமார், கடந்த 2022ம் ஆண்டு அந்த கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார். தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில். நிதிஷ்குமார் மீண்டும் பாஜக பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ராஷ்டிரிய ஜனதா தளம் உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு மீண்டும், பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 






பாஜக ஆதரவில் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ் குமார்?


வெளியாகியுள்ள பல்வேறு தகவல்களின்படி, “நிதிஷ்குமார் இன்று பீகார் ஆளுநரை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அதேநேரம், அடுத்த சில மணி நேரங்களிலேயே பாஜகவின் ஆதரவுடன் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க உள்ளார். இதற்காக இன்று மாலை ஆளுநரை சந்திக்க, நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளார்” என கூறப்படுகிறது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன், பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சென்று சந்தித்து, I.N.D.I.A. கூட்டணி உருவாக முக்கிய பங்கு வகித்தார். ஆனால், தற்போது அவர் மீண்டும் பாஜக உடனே கூட்டணி அமைக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமைச்சரவையில் மாற்றம்?


நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,   கூட்டணியில் உள்ள ஒவ்வொரு நான்கு எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் விகிதம், பாஜகவிற்கு பதவி வழங்க வேண்டும். அதாவது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள் வகித்து வரும் அமைச்சர் பதவிகள் பாஜகவினருக்கு வழங்க வேண்டும். இரண்டு முதலமைச்சர்கள் உடன் சபாநாயகர் பதவியையும் பாஜகவை சேர்ந்த நபருக்கு ஒதுக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு தேர்தலில் 12-15 தொகுதிகள் மட்டுமே நிதிஷ்குமார் கட்சிக்கு ஒதுக்கப்படும்” ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது. இதனிடையே, துணை முதலமைச்சராக சுஷில் மோடியை பாஜக தேர்வு செய்ய வேண்டும் என, நிதிஷ்குமார் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


கூட்டணி மாறுவது ஏன்?


தான் முன்னின்று உருவாக்கிய எதிர்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் தான், நிதிஷ்குமார் மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ஜனநாயகத்தை காக்க நினைப்பவர்கள் அவசரப்பட்டு மனம் மாறக்கூடாது என, நிதிஷ்குமாருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதே போன்று, நிதிஷ் குமார் I.N.D.I.A. கூட்டணியில் இருந்து வெளியேறக் கூடாது என, அகிலேஷ் யாதவும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.