கடந்த 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு, இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகாலம், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவுக்கு பெரும் போராட்டத்திற்கு பிறகே சுதந்திரம் கிடைத்தது.


அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறது. எண்ணற்ற இந்தியர்களின் தன்னலமற்ற தியாகங்களும், அவர்கள் வழிநடத்திய சுதந்திரப் போராட்டமும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.


காலனியாதிக்கத்தால் இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகில் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை ஐரோப்பிய நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து ஆட்சி புரிந்து வந்தன.


இரண்டாம் உலகப்போரின் முடிவால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவீனம் அடைந்தது. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்தது. குறிப்பாக, ஆகஸ்ட் 15ஆம் தேதி இன்று இந்தியா மட்டும் இன்றி பிற நாடுகளுக்கும் சுதந்திரம் கிடைத்தது. இந்திய வரலாற்றை மாற்றிய எழுதிய ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று வேறு எந்த நாடுகளுக்கு எல்லாம் சுதந்திரம் கிடைத்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.


வடகொரியா:


வட கொரியா, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று தேசிய விடுதலை தினத்தை கொண்டாடுகிறது. 35 ஆண்டுகால ஜப்பானிய ஆக்கிரமிப்பும் கொரியா மீதான காலனித்துவ ஆட்சியும் அன்றுதான் முடிவுக்கு வந்தது. உலகப்போரில் நேச நாட்டுப் படைகளின் உதவியுடன் சுதந்திரத்தை அடைந்தது.


கடந்த 1945ஆம் ஆண்டு, கொரிய தீபகற்பம் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்டு, வடகொரியா, தென்கொரியா என இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டன. சுதந்திர கொரிய அரசாங்கங்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1948ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி அமைந்தன.


தென்கொரியா:


வடகொரியாவை போன்றே தென்கொரியாவும் ஆகஸ்ட் 15ஆம் தேதியைதான், சுதந்திரமாக தினமாக கொண்டாடுகிறது. குவாங்போக்ஜியோல் என்று இந்த நாளை தென் கொரியர்கள் அழைக்கிறார்கள். அதாவது ஒளி திரும்பிய நாள் என கூறுகிறார்கள். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததைக் கொண்டாடும் வகையில், பல நாடுகள் இந்தத் தேதியை 'ஜப்பான் தினத்தின் மீதான வெற்றி' என்றும் குறிப்பிடுவது சுவாரஸ்யமானது.


பஹ்ரைன்:


இந்தியாவை போன்று பஹ்ரைனும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. கடந்த 1971ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதிதான், சுதந்திரம் பெற்றது. இந்தியா தனது சொந்த சுதந்திரத்தை அடைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகுதான், பஹ்ரைனுக்கு சுதந்திரம் கிடைத்தது. 


1960 களின் முற்பகுதியில் சூயஸின் கிழக்கிலிருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் அறிவித்ததைத் தொடர்ந்து, பஹ்ரைனில் மக்கள்தொகை கணக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபை எடுத்தது. அதன் பிறகே, பஹ்ரைனுக்கு சுதந்திரம் கிடைத்தது.


காங்கோ:


ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த நாடு காங்கோ-பிராசாவில்லே என்றும் அழைக்கப்படுகிறது. இது முதலில் பிரெஞ்சு காலனியாக இருந்தது. ஆகஸ்ட் 15, 1960 இல் இந்த நாடு பிரான்சிடம் இருந்து முழு சுதந்திரம் பெற்றது. எனவே, ஆகஸ்ட் 15ஆம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது. இது, தேசிய தினம் என்றும் அழைக்கப்படுகிறது.